ஐப்பசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

2 hours ago 2

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில், ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி இன்று காலை 5.40 மணிக்கு தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பல்வேறு பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருகை தர தொடங்கினர். கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சாமி தரிசனம் 4 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உட்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர். பவுர்ணமி கிரிவலமானது நாளை (சனிக்கிழமை) காலை 3.33 மணிக்கு பவுர்ணமி நிறைவடைகிறது. அதனால் பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Read Entire Article