ஐபிஎல் போட்டியில் பெங்களூரில் நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
- ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு, இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா, இரு முன்னாள் சாம்பியன்கள் சென்னை, மும்பை அணிகளை வீழ்த்தி 3 வெற்றிகளை பெற்றுள்ளது.
- எஞ்சிய ஒரு ஆட்டத்தில் மற்றொரு முன்னாள் சாம்பியனான குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்தது.
- இதுவரை தான் ஆடிய 3 போட்டிகளிலும் லக்னோ, முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத், சென்னை அணிகளையும் வீழ்த்தி அக்சர் படேல் தலைமையிலான டெல்லி ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தி உள்ளது.
- இன்று பெங்களூரு 5வது லீக் போட்டியிலும், டெல்லி 4வது லீக் போட்டியிலும் களம் காணுகின்றன.
- இதுவரை 17 ஐபிஎல் தொடர்களில் விளையாடி உள்ள இவ்விரு அணிகளுக்கும் கோப்பை வெறுங்கனவாகவே இருக்கிறது.
- இந்த 2 அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
- அவற்றில் பெங்களூரு 19, டெல்லி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
- மீதி ஒரு போட்டி (2015) மழை காரணமாக கைவிடப்பட்டது.
- இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக பெங்களூரு 215, டெல்லி 196 ரன் விளாசி இருக்கின்றன.
- குறைந்தபட்சமாக பெங்களூரு 137, டெல்லி 95 ரன் எடுத்துள்ளன.
- இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் பெங்களூரு 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- இவ்விரு அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக மோதிய தலா 5 போட்டிகளில் பெங்களூரு 3-2 என்ற கணக்கிலும், டெல்லி 4-1 என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை பெற்றுள்ளன.
- பெங்களூரு சின்னசாமி அரங்கில் இவ்விரு அணிகளும் மோதிய 12 போட்டிகளில் பெங்களூரு 6-4 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- இந்த 2 அணிகளும் ஏப்.27ம் தேதி மீண்டும் 46வது லீக் போட்டியில் டெல்லியில் மோத இருக்கின்றன.
ரிடையர்ட் அவுட் ஆன ஃபாரீன் வீரர் கான்வே
ஐபிஎல் 22வது லீக் போட்டியில் சென்னைக்கு எதிராக பஞ்சாப் அணி 219 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து ஆடிய சென்னை அணி வீரர்கள் சொதப்பலாக ஆடியதால் குறைந்த ரன்களே சேர்ந்தன. சென்னை அணி வீரர் டெவோன் கான்வே ஆரம்பத்தில் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தபோதும், கடைசி கட்டத்தில் ரன்களை சேர்க்க சிரமப்பட்டார். அதனால் வெற்றிக்கு தேவைப்படும் ரன் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கத் துவங்கியது. அதையடுத்து, ‘ரிடையர்ட் அவுட்’ முறையில் அவர் திரும்பப் பெறப்பட்டார். ஐபிஎல் போட்டிளில் இதுவரை 5 பேர் ரிடையர்ட் அவுட்டாகி உள்ளனர். அவர்களில் டேவோன் கான்வே மட்டுமே வெளிநாட்டை சேர்ந்தவர். இதன் மூலம், ரிடையர்ட் அவுட் ஆகிய முதல் வெளிநாட்டவர் என்ற எதிர்மறை சாதனையை கான்வே நிகழ்த்தி உள்ளார். இந்த முறையில், அஸ்வின், அதர்வா டெய்டே, சாய் சுதர்சன், திலக் வர்மா ஆகிய இந்தியர்கள் இதுவரை அவுட்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக 5 வைடுகள் ஐபிஎல்லில் ஷர்துல் வேதனை
ஐபிஎல் 21வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா – லக்னோ அணிகள் மோதின. லக்னோ அணி அதிரடியாக ஆடி 238 ரன்கள் குவித்தது. அதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்களும், சளைக்காமல் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதனால், வெற்றி பறிபோய் விடும் என்ற பதைபதைப்பில் லக்னோ பந்து வீச்சாளர்கள் வைடு பந்துகளை அவ்வப்போது வீசினர்.
கொல்கத்தா கேப்டன் அஜிங்கிய ரகானே அரை சதம் அடித்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தபோது, 13வது ஓவரை ஷர்துல் தாக்குர் வீசினார். அவரை சிக்சர் அல்லது பவுண்டரி அடிக்காமல் தடுக்கும் நோக்கில் பந்துகளை சற்று தள்ளியே வீசிய ஷர்துல் தாக்குர் அடுத்தடுத்து 5 வைடு பந்துகளை வீசினார். ஐபிஎல் தொடரில் ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக வீசிய அதிக வைடுகள் இவையே. கொல்கத்தா வீரர்கள் மொத்தத்தில் 20 வைடுகளை வீசினர். அதில் ஷர்துல் தாக்குர் மட்டும் 8 வைடுகளை வீசினார். அதேசமயம், லக்னோ அணி வீரர்கள் ஒட்டு மொத்தமாக, 8 வைடு பந்துகளை மட்டுமே வீசியது குறிப்பிடத்தக்கது.
The post ஐபிஎல் போட்டியில் இன்று தோல்வியே காணாத டெல்லி கோப்பை கனவில் பெங்களூரு appeared first on Dinakaran.