சென்னை: போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது, கஸ்தூரியை தேடி தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையானதால், கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அடுத்த நாளே, செய்தியாளர் சந்திப்பில் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார். எனினும் அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, கலவரத்தை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரியிருந்தார். அதில் நீதிபதி கடுமையான கண்டனங்களை பதிவு செய்துவிட்டு மனுவை நிராகரித்தார். போலீசார் அவருக்கு சம்மன் கொடுக்கச் சென்ற போது நடிகை கஸ்தூரி தலைமறைவானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கஸ்தூரியை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். இந்நிலையில், ஐதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவர் உதவியுடன் நடிகை கஸ்தூரி பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தமிழக போலீசார் ஆந்திராவில் முகாமிட்டு தங்கியிருந்தனர். கஸ்தூரிக்கு ஹைதராபாத்தில் ஒரு வீடு இருப்பதாக சொல்லப்படுகிறது. அது போல் அவர் ஆந்திரா அரசியலில் குதிக்க போவதாக அவரே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் அங்கு சென்றிருக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் சார்பில் சொல்லப்படுகிறது. ஆந்திராவில் கஸ்தூரி தலைமறைவாக உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஐதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவர் உதவியுடன் நடிகை கஸ்தூரி பதுங்கல்: கைது செய்ய போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.