சென்னை: “வருமான வரித் துறை, புலனாய்வுத் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை என எதுவாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நெருக்கடியைப் பார்த்து வளர்ந்திருக்கக் கூடியவர்கள் நாம்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், “நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் எந்த நிலையில் வந்தாலும் சரி எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ., வேலுவின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசியதாவது: சட்டமன்ற உறுப்பினரான வேலு கட்சியில் பொறுப்பேற்று பணியாற்றி படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு மாவட்டச் செயலாளர் என்ற பொறுப்பை ஏற்றிருக்கிறார். ஏதோ, ஊர்ந்து வந்து ஏறவில்லை. தவழ்ந்து வந்து ஏறவில்லை, படிப்படியாகதான் ஏறியிருக்கிறார். ஊர்ந்து, தவழ்ந்து என்று சொல்கின்றபொழுது ஏன் கரவொலி எழுப்பினீர்கள் என்று எனக்கும் புரிகிறது. உங்களுக்கும் புரிகிறது.