துபாய்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 252 ரன்கள் தேவை. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.
துபாயில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட் செய்ய முடிவு செய்தது. கேப்டன் ரோஹித் தொடர்ந்து 12-வது முறையாக டாஸை தோற்றார்.
ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் இணை அதிரடியாக விளையாடி 5 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்தது. 8-வது ஓவரில் வில் யங் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் வருண் வீழ்த்தினார். இதையடுத்து 11-வது ஓவரை வீசிய குல்தீப் முதல் பந்தில் ரச்சின் ரவீந்திராவை போல்ட் ஆக்கினார். அதற்கடுத்து அவர் வீசிய 13-வது ஓவரில் கேன் வில்லியம்சன் 11 ரன்கள் எடுத்த நிலையில் கொடுத்த கேட்ச்சை அவரே பிடித்து வெளியேற்றினார்.
பின்னர் நியூஸிலாந்து அணியின் மிட்செல் மற்றும் டாம் லேதம் இணைந்து நிதானமாக அணியை மீட்டனர். 24-வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் லேதமை ஜடேஜா வெளியேற்றினார். அதிரடியாக ஆடி ரன் குவிக்கும் கிளென் பிலிப்ஸ் 52 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வருண் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
பொறுமையாக விளையாடிய மிட்செல் 91 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி வேகத்தில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து சான்ட்னரை கோலி ரன் அவுட் செய்தார். மைக்கேல் பிரேஸ்வெல் 40 பந்துகளில் 53 ரன்களை அவர் எடுத்தார். இறுதியில் 50 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்களை எடுத்தது.
இந்திய அணியின் பவுலர்கள் தரப்பில் வருண் மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா மற்றும் ஷமி தலா 1 விக்கெட் கைப்பற்றினார். 252 ரன்கள் எடுத்தால் சாம்பியன் டிராபியை வெல்லலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
The post ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: 252 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி appeared first on Dinakaran.