ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அபார வெற்றி

2 months ago 12

கராச்சி: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 351 ரன் குவித்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 47.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகின்றன. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் 4வது ஒரு நாள் போட்டி லாகூர் நகரில் நேற்று, குரூப் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்தின் பில் சால்ட், பென் டக்கெட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். பில் சால்ட் 10 ரன்னில் துவார்சுயிஸ் பந்தில் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் தந்து வெளியேறினார். இருப்பினும் பென் டக்கெட் நிலைத்து ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அணியின் ஸ்கோர் 43 ஆக இருந்தபோது ஜேமி ஸ்மித் 15 ரன்னில், துவார்சுயிஸ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின் வந்த ஜோ ரூட் – பென் டக்கெட் ஜோடி 158 ரன்களை விளாசியது.

68 ரன்னில் இருந்தபோது ஜோ ரூட், ஜம்பா பந்தில் எல்பிடபிள்யு ஆனார். பின் வந்த ஹேரி புரூக், ஜம்பா பந்தில் 3 ரன்னில் வீழ்ந்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்த போதும், பென் டக்கெட் சிறப்பாக ஆடி 95 பந்துகளில், சதம் விளாசினார். பின் வந்த கேப்டன் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தும் பென் டக்கெட் ரன் வேட்டையை தொடர்ந்தார். இந்த ஜோடி 42 பந்துகளில் 61 ரன்களை சேர்த்திருந்த நிலையில், பட்லர் (23), மேக்ஸ்வெல் பந்தில் அவுட்டானார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 14 ரன்னில், துவார்சுயிஸ் பந்தில் அவுட்டானார். அதுவரை நிலைத்து ஆடிக் கொண்டிருந்த பென் டக்கெட், 47.2 ஓவரின்போது லபுஷனே பந்தில் எல்பிடபிள்யு ஆகி அவுட்டானார். அவர், 143 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்சர், 17 பவுண்டரிகளுடன் 165 ரன் விளாசியிருந்தார். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

இதையடுத்து, 352 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸி அணி ஆடத் துவங்கியது. துவக்க வீரர்களாக மாத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். ஹெட் 6 ரன்னில், ஆர்ச்சர் பந்தில் அவரிடமே கேட்ச் தந்து அவுட்டானார். பின் வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 5 ரன்னில், மார்க் வுட் பந்தில் பென் டக்கெட்டிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.

லபுஷனே 47 ரன் எடுத்திருந்தபோது அடில் ரஷித் பந்தில் பட்லரிடம் கேட்ச் தந்து அவுட்டானார். சிறிது நேரத்தில் ஷார்ட் 63 ரன்னில், லிவிங்ஸ்டோன் பந்தில் அவரிடமே கேட்ச் தந்து வெளியேறினார்.47.3 ஓவர்்்களில் ஆஸ்திரலியா 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. 120 ரன்கள் எடுத்த ஜோஸ் இங்கிலிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

* ஆஸி.க்கு பதிலாக இந்திய தேசிய கீதம்
லாகூர் கடாபி மைதானத்தில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையே நேற்று ஒரு நாள் போட்டி துவங்கும் முன், இங்கிலாந்து நாட்டு தேசிய கீதம் முதலில் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆஸியின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். மாறாக, இந்திய தேசிய கீதத்தில் இடையில் வரும் வரிகளான, ‘பாரத் பாக்ய விதாதா…’ என்ற வரி இசைக்கத் துவங்கியது.

இதை அறிந்து அதிர்ச்சியுற்ற பொறுப்பாளர் உடனடியாக அந்த கீதத்தை நிறுத்தி ஆஸி நாட்டின் தேசிய கீதத்தை இசைக்க வைத்தார். பாகிஸ்தானில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க முடியாது என மறுத்து துபாயில் நடக்கும் போட்டிகளில் இந்திய அணி கலந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் தேசிய கீதம் தவறுதலாக ஒலிபரப்பான சம்பவம் கடும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து பரவலாக பேசப்பட்டது.

The post ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அபார வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article