மும்பை,
2025 ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் 24 & 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
அதன்படி நடைபெற்ற இந்த ஏலத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 18 வீரர்களை வாங்கியது. இதற்கு முன்பாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகிய 5 வீரர்களை தக்கவைத்தது.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்து வந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை நிர்வாகம் கழற்றி விட்டது. அவரை மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ. 11.25 கோடிக்கு வாங்கியது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் நிச்சயம் இஷான் கிஷனை தவற விடும் என்று அந்த அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், " எங்களுடைய ஓய்வறையில் ஒரு புத்துணர்ச்சி அளிக்கும் வீரராக இஷான் கிஷன் இருந்து வந்தார். நாங்கள் அவரை தக்கவைக்காத போதே ஏலத்தில் மீண்டும் வாங்க முடியாது என்பதை தெளிவாக அவரிடம் தெரிவித்திருந்தோம். ஏனெனில் அவரைப்போன்ற திறமையான வீரர் நிச்சயம் அதிக தொகைக்கு செல்வார் என்பது எங்களுக்கு தெரியும். அவருடைய குணம் மிகவும் இயல்பான ஒன்று. எங்களது அணியில் ஒரு ஆற்றல் மிக்க வீரராகவும் இருந்து வந்தார்.
அவரிடம் இருந்து கிடைத்த அன்பும், அரவணைப்பும் இயல்பான ஒன்று. இனிமேல் அவரைப் போன்ற ஒரு வீரர் மும்பை இந்தியன்ஸ் அணியில் கிடைப்பது கடினம். மற்றவர்கள் மீது கேக் அடிப்பது (கொண்டாட்டத்தின்போது), வீரர்களிடம் குறும்பு செய்வது என அனைத்துமே இனி எங்களது அணியில் குறைந்து விடும். எங்களது அணிக்குள் அன்பை கொண்டு வந்தவர் அவர். எப்போதுமே நாங்கள் உற்சாகமாக இருக்க அவர் ஒரு காரணமாக இருந்த வேளையில் நிச்சயம் அவரை நாங்கள் இனி தவற விடுவோம்" என்று கூறினார்.