
லக்னோ,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 118 ரன்களுடன் களத்தில் இருந்தார். பெங்களூரு தரப்பில் நுவான் துஷாரா, புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜிதேஷ் ஷர்மா 85 ரன்களும்,விராட் கோலி 54 ரன்களும் அடித்தனர். லக்னோ அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கடைசி லீக்கில் ஆடிய பெங்களூரு அணி 9-வது வெற்றியை பெற்றதுடன், குஜராத் டைட்டன்சை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.
இதனையும் சேர்த்து பெங்களூரு அணி இந்த சீசனில் வெளியூர்களில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சீசனில் வெளியூர்களில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் (லீக் போட்டிகள் மட்டும்) வெற்றி பெற்ற முதல் அணி என்ற மகத்தான சாதனையை பெங்களூரு படைத்துள்ளது.