ஐ.பி.எல். மீண்டும் தொடங்கும்போது பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் ஆட்டம் நடத்தப்படுமா? - வெளியான தகவல்

3 hours ago 1

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரில் தர்மசாலாவில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பஞ்சாப் அணி 10.1 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது. போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும், மைதானத்தில் இருந்த ரசிகர்களும் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் ஐ.பி.எல். தொடர் ஒரு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்தது. இதையடுத்து தர்மசாலாவில் இருந்த பஞ்சாப் மற்றும் டெல்லி வீரர்கள், துணை ஊழியர்கள், ஒளிபரப்பு பணியாளர்கள் உட்பட சுமார் 300 பேர் சிறப்பு வந்தே பாரத் ரெயில் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

ஒரு வார காலத்திற்கு பின்னர் ஐ.பி.எல். தொடங்கினால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் ஆட்டம் மீண்டும் நடத்தப்படுமா? அல்லது போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படுமா? என்பதில் ரசிகர்களிடையே கேள்வி எழும்பி உள்ளது.

இந்நிலையில், இந்த கேள்விக்கு பதில் அளிக்கு வகையில் இந்த போட்டி தொடர்பாக சில கருத்துகள் வெளியாகி உள்ளன. அதன்படி, இந்த போட்டி மறுபடியும் முதலில் இருந்து நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. ஏனெனில் இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் உள்ளதால் போட்டியை முழுவதுமாக நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Read Entire Article