
ஐதராபாத்,
ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, ஐதராபாத் வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதன் காரணமாக டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸ் முடிந்த பின்னர் மழை பெய்தது. மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தற்போது வரை 11 ஆட்டங்களில் 3 வெற்றி, 7 தோல்வி கண்டுள்ள ஐதராபாத் அணி தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், இந்த போட்டியில் ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் முதல் கேப்டனாக வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது, பவர் பிளேவிற்குள் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் கேப்டன் என்கிற சாதனையை கம்மின்ஸ் படைத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் கருண் நாயர், டு பிளெஸ்சிஸ், அபிஷேக் பொரேல் ஆகியோரின் விக்கெட்டுகளை கம்மின்ஸ் பவர் பிளேவிற்குள் வீழ்த்தினார்.
பவர் பிளேவிற்குள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய கேப்டன்கள் பட்டியல்:
கம்மின்ஸ் - 3/12 - எதிரணி டெல்லி, 2025
அக்சர் படேல் - 2/10 - எதிரணி பெங்களூரு, 2025
ஜாஹீர் கான் - 2/13 - எதிரணி கொல்கத்தா, 2017