மும்பை,
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான புதிய ஏல விதிமுறைகளை பி.சி.சி.ஐ. நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் அன்கேப்ட் வீரர் என்ற பழைய விதிமுறையை பி.சி.சி.ஐ. மீண்டும் கொண்டு வந்துள்ளது. இதைப் பயன்படுத்தி மகேந்திரசிங் தோனியை ரூ. 4 கோடிக்கு சென்னை அணி தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நம்பர் 1 அல்லது 2வதாக இருக்க வேண்டுமென்ற ஆசை தோனிக்கு கிடையாது என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். மாறாக சிஎஸ்கே அணிக்காகவும் ரசிகர்களுக்காகவும் குறைந்த தொகைக்கு தோனி விளையாட தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே ருதுராஜ், ஜடேஜா, பதிரனாவை ஆகியோருடன் தோனி சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்படலாம் என்று அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "முதலாவதாக எம்எஸ் தோனி கண்டிப்பாக இருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் தற்போது அவர் அன்கேப்ட் வீரர். சிஎஸ்கே அணியில் நம்பர் 1 அல்லது 2வதாக இருக்க ஆசையில்லை என்பதை அவர் கடந்த பல வருடங்களாக காண்பித்து வருகிறார். எனவே அவருடைய மதிப்பில் எந்த சந்தேகமும் கிடையாது. கேப்டன் ருதுராஜ்-க்கு கடந்த வருடம் நன்றாக அமைந்தது. எனவே அவரை நீங்கள் தக்க வைப்பீர்கள்.
அதே போல ரவீந்திராவையும் விட முடியாது. நான் இங்கே ரச்சினை பற்றி பேசவில்லை ஜடேஜாவை பற்றி பேசுகிறேன். இந்த 3 வீரர்களும் அவர்களுக்கு கச்சிதமானவர்கள் என்று நான் கருதுகிறேன். பதிரனாவையும் உங்களால் விட முடியாது. அவரை நீங்கள் தக்க வைக்க வேண்டும். இந்த நால்வரையும் தக்க வைத்து எஞ்சிய 2 வீரர்களை சென்னை அணி ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கக்கூடும்" என்று கூறினார்.