புதுடெல்லி,
18-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24, 25-ந்தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறுகிறது. ஐ.பி.எல். ஏலத்திற்கு மொத்தம் 1,574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அந்த பட்டியல் 10 அணிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் தேவை, விருப்பம் அடிப்படையில் ஆயிரம் வீரர்கள் நீக்கப்பட்டு, மொத்தம் 574 பேர் கொண்ட இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதில் 366 பேர் இந்தியர்கள், 208 வீரர்கள் வெளிநாட்டவர் ஆவர். இவர்களில் 241 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் லோகேஷ் ராகுல் ஆகியோரை அந்தந்த அணிகள் தக்கவைக்காததால் இவர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள்.
இதனால் கூடுதல் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இவர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடிக்காக கொல்கத்தா அணிக்கு வாங்கப்பட்டார். அதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தார்.
இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல். ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை (அதிக விலைக்கு ஏலம் போன வீரர்) இந்தியாவின் ரிஷப் பண்ட் முறியப்பார் என இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
மிட்சேல் ஸ்டார்க்கின் ஐ.பி.எல் ஏலம் சாதனை (அதிக விலைக்கு ஏலம் போன வீரர்) மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. ஏனெனில் ரிஷப் பண்ட் அதை உடைப்பதற்காக தயாராக உள்ளார் என பதிவிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல்-லில் அறிமுகமானது முதல் டெல்லி அணியில் விளையாடிய ரிஷப் பண்ட் 111 ஆட்டங்களில் 3284 ரன்களை 148.93 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 1 சதம் மற்றும் 18 அரைசதம் அடங்கும்.