மும்பை,
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான புதிய ஏல விதிமுறைகளை பி.சி.சி.ஐ. நேற்று வெளியிட்டது. அதில் அன்கேப்ட் வீரர் விதிமுறையை பி.சி.சி.ஐ. மீண்டும் கொண்டு வந்துள்ளது. இதைப் பயன்படுத்தி மகேந்திரசிங் தோனியை ரூ. 4 கோடிக்கு சென்னை அணி தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ள அன்கேப்ட் விதிமுறையால் மோகித் சர்மா, பியூஷ் சாவ்லா, விஜய் சங்கர், சந்தீப் சர்மா, கரண் சர்மா போன்ற வீரர்களும் பயனடைவார்கள் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அன்கேப்ட் பிளேயர் விதிமுறை ஏன் உங்களுக்கு வேண்டும்? ஏனெனில் உங்களால் அதை பயன்படுத்தி ஒருவரை ரூ.4 கோடிக்கு தக்க வைக்க முடியும். எனவே அது உங்களுடைய மொத்த ஏலத் தொகையை பாதிக்காது. நீங்கள் 5 வீரர்களை தக்க வைத்தால் சுமார் ரூ.75 கோடி செலவிட வேண்டும். அதனால் உங்களுடைய ஏலத்தொகை குறையும். அன்கேப்ட் பிளேயர் விதிமுறை பற்றி பேசும் போது எம்.எஸ். தோனி இருப்பார். 2008 முதலே நடப்பில் இருந்த அந்த விதிமுறை அதிகம் பயன்படுத்தாததால் நீக்கப்பட்டு தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன் காரணமாக பியூஷ் சாவ்லா, மோகித் சர்மா, சந்தீப் சர்மா, விஜய் சங்கர், கரண் சர்மா, மயங்க் மார்கண்டே, சஷாங்க் சிங் போன்றவர்கள் பயனடைவார்கள். ஏனெனில் அவர்களுக்கு தனியாக பணம் செலுத்த அணி நிர்வாகங்கள் தயங்கலாம். திடீரென இப்படி ஒரு விதிமுறை வரும்போது அதைப் பயன்படுத்தவே அனைவரும் விரும்புவார்கள். கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரூ.4 கோடிக்கு தோனியை தக்க வைக்கும்" என்று கூறினார்.