
சென்னை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் 70 ஆட்டங்கள் கொண்ட லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றி பெற்றது.
இந்நிலையில் லீக் சுற்றுகளின் முடிவில் அணிகளின் நிலை குறித்து இங்கு காணலாம்..!
14 போட்டிகளில் விளையாடி தலா 19 புள்ளிகள் (9 வெற்றி, மழையால் ஒரு ஆட்டம் ரத்து) பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் முதலிடமும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2-வது இடமும் பெற்று புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.
9 வெற்றிகள் பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி 3-வது இடமும், 8 வெற்றிகள் பெற்ற மும்பை இந்தியன்ஸ் 16 புள்ளிகளுடன் 4-வது இடமும் பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பெற்ற இந்த 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டன.
இதனையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் (15 புள்ளிகள்) 5-வது இடமும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் (13 புள்ளிகள்) 6-வது இடமும் பெற்று நடப்பு ஐ.பி.எல். சீசனை நிறைவு செய்துள்ளன.
தலா 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 7-வது இடமும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8-வது இடமும் பெற்றுள்ளன.
கடைசி 2 இடங்களில் முறையே தலா 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் (9-வது இடம்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (10-வது இடம்) அணிகள் இடம்பெற்றுள்ளன.