
ஜெய்ப்பூர்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 50 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை அபார வெற்றி பெற்றது.
இதனையும் சேர்த்து நடப்பு சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ராஜஸ்தானால் வெறும் 12 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். இதனால் அந்த அணி நடப்பு சீசனில் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. இதனால் எதிர்வரும் போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெற ராஜஸ்தான் போராட உள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான சந்தீப் சர்மா விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார். நடப்பு சீசனில் 10 போட்டிகளில் விளையாடிய சந்தீப் சர்மா 9 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.