ஐ.பி.எல்.2025: மெகா ஏலம் நடைபெறும் இடத்தை முடிவு செய்த பி.சி.சி.ஐ..? - வெளியான புதிய தகவல்கள்

1 week ago 5

மும்பை,

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விவரங்களை அறிவிக்க கடந்த 31ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை கடந்த 31ம் தேதி அறிவித்துவிட்டன. இதையடுத்து, மெகா ஏலம் நெருங்கும் நிலையில், அது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 -ம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் மெகா ஏலத்தை நடத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஆஸ்திரேலிய இந்தியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதே வேளையில் ஐ.பி.எல் மெகா ஏலத்தை நடத்தினால் ஆஸ்திரேலிய போட்டிகளை யாரும் பார்க்க மாட்டார்கள்.

ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி அதிகாலை 5 மணிக்கு தொடங்கி மதியம் 12 அல்லது ஒரு மணிக்கு முடிந்துவிடும். இதனால் ஐ.பி.எல். மெகா ஏலத்தை மதியம் தொடங்கி இரவு வரை நடத்த பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஒவ்வொரு அணியிலும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் விவரம் பின்வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதீசா பத்திரானா என 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ராணா மற்றும் ரமன்தீப் சிங் ஆகியோரை தக்க வைத்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்: சஷாங்க் சிங் மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் ஆகிய இருவரை மட்டும் தக்கவைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்: ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ்: அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல் ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ள நிலையில், அந்த அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்டை கழற்றி விட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: ஹென்ரிச் கிளாசென், கம்மின்ஸ், அபிஷேக் சர்மா , டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரை தக்க வைத்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ்: ரஷித் கான், சுப்மன் கில், சாய் சுதர்சன், ராகுல் தெவாட்டியா , ஷாருக் கான் ஆகியோரை மட்டுமே வைத்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஷின் கான், ஆயுஷ் பதோனி ஆகியோரை தக்க வைத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மையர், சந்தீப் சர்மா ஆகிய 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.

Read Entire Article