ஐ.பி.எல். 2025: டெல்லி-லக்னோ இன்று மோதல்

1 day ago 4

விசாகப்பட்டினம்,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.

கடந்த சீசனில் 6-வது இடம் பெற்ற டெல்லி அணி புதிய கேப்டன் அக்ஷர் பட்டேல் தலைமையில் களம் இறங்குகிறது. கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி அணிக்காக ஆடியவரும், முந்தைய சீசனில் கேப்டனாக இருந்தவருமான ரிஷப் பண்ட் வெளியேறியதால் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் கேப்டன் அவதாரம் எடுத்துள்ளார். லக்னோ அணியின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுல் அணியில் புதிதாக ஐக்கியமாகி இருக்கிறார்.

டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், பாப் டுபிளிஸ்சிஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், மெக்குர்க், அஷூதோஷ் ஷர்மாவும், பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், முகேஷ் குமார், குல்தீப் யாதவும், ஆல்-ரவுண்டராக அக்ஷர் பட்டேலும் வலுசேர்க்கிறார்கள்.

லக்னோ அணியால் அதிகபட்ச தொகையாக ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் அந்த அணியை வழிநடத்துகிறார். அந்த அணியில் பேட்டிங்கில் ரிஷப் பண்ட், மார்க்ரம், டேவிட் மில்லர், நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, மிட்செல் மார்ஷ் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் ஷமார் ஜோசப், ரவி பிஷ்னோய், ராஜ்வர்தர் ஹங்கர்கேகர் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.

காயம் காரணமாக அணியின் வேகப்பந்து வீச்சு பலவீனம் கண்டுள்ளது வேகப்பந்து வீச்சாளர்கள் மயங்க் யாதவ், ஆவேஷ் கான், ஆகாஷ் தீப் ஆகியோர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. காயத்தால் அவதிப்பட்டு வந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மொசின் கான் போட்டி தொடரில் இருந்து நேற்று விலகினார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரது வருகை அணிக்கு பலம் சேர்க்கும்.

புதிய கேப்டன்களுடன் களம் காணும் இரு அணிகளும் வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்க முனைப்பு காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ 3 ஆட்டத்திலும், டெல்லி 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ ஹாட் ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம்.

Read Entire Article