
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற 68-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இந்த இரு அணிகளுக்கும் இது கடைசி ஆட்டமாகும்.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிளாசென் 105 ரன்களும், டிராவிஸ் ஹெட் 76 ரன்களும் குவித்தனர். கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சுனில் நரைன் 31 ரன்களிலும், டி காக் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அவசரகதியில் விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். கேப்டன் ரகானே 15 ரன்களிலும், ரகுவன்ஷி 9 ரன்களிலும், ரசல் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். இறுதி கட்டத்தில் மணிஷ் பாண்டே (37 ரன்கள்) மற்றும் ஹர்ஷித் ராணா (34 ரன்கள்) பொறுப்புடன் விளையாடி அணியை கவுரவ நிலைக்கு கொண்டு வந்தனர்.
18.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த கொல்கத்தா 168 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஐதராபாத் நடப்பு சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஐதராபாத் தரப்பில் ஜெய்தேவ் உனத்கட், ஹர்ஷ் துபே மற்றும் எஷான் மலிங்கா தலா 3 விக்கெட்டுகளும், 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.