
துபாய்,
16-வது ஐ.சி.சி. ஜூனியர் (19-வயதுக்குட்பட்டோர்) 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் அடுத்த வருடம் ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் நேரடியாகவும், தொடரை நடத்தும் உரிமையின் அடிப்படையில் ஜிம்பாப்வே அணியும் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 5 இடங்களுக்கான அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அதன்படி ஆப்பிரிக்க பிராந்திய நாடுகளுக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற தான்சானியா, ஐ.சி.சி. ஜூனியர் உலகக்கோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.
மேலும் 2026 ஜூனியர் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி சுற்று மூலம் முன்னேறிய முதல் அணி என்ற சாதனையையும் தான்சானியா படைத்துள்ளது.