ஏலகிரிமலை அடிவாரத்தில் காட்டிற்கு தீ வைப்பு: மரங்கள் மூலிகைசெடிகள் கருகியது

4 hours ago 3

ஜோலார்பேட்டை: ஏலகிரிமலை அடிவாரத்தில் காட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். வேகமாக பரவி வரும் தீயால் அரிய வகை மரங்கள், மூலிகை செடி, கொடிகள் கருகியது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்த மலையில் அரியவகை மரங்கள், மூலிகை செடி, கொடிகள் உள்ளிட்டவை உள்ளன. மேலும் மான், கரடி, மயில், முயல், குரங்கு, மலைப்பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மலையடிவாரம் உள்ள பகுதிகளுக்கு சென்று சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு, புகை பிடித்து வீசிவிடுவதால் சருகுகள் மூலம் தீப்பற்றி காட்டுத்தீயாக மாறிவிடுகிறது. இதனால் மரம், செடி, கொடிகள் சாம்பலாகிறது. சிறிய வகை உயிரினங்கள் கருகி இறந்துவிடுகிறது.

இந்நிலையில் ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்னகவுண்டனூர் பகுதியில் ஏலகிரிமலை அடிவாரத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் யாரோ காட்டுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் தீ மளமளவென பரவியது. சுமார் 2 கி.மீ. தூரம் மலையின் நடுப்பகுதி வரை தீ பற்றி எரிகிறது. இதனால் ஏலகிரிமலையில் இருந்த அரிய வகை மரங்கள், மூலிகை செடி, கொடிகள் சாம்பலானது. மேலும் காட்டில் வசிக்கும் சிறிய வகை உயிரினங்கள் கருகி இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இன்று காலையும் காட்டுத்தீ எரிந்து வருகிறது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோடை காலம் தொடங்கியது முதல் மலைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதை தடுக்க தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை, அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதை கண்டு கொள்ளாமல் சமூகவிரோதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மர்மநபர்களை வனத்துறையினர் கண்காணித்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஏலகிரிமலை அடிவாரத்தில் காட்டிற்கு தீ வைப்பு: மரங்கள் மூலிகைசெடிகள் கருகியது appeared first on Dinakaran.

Read Entire Article