சேலம்: ஏற்காட்டில் நாளை மாலை கோடை விழா துவங்குகிறது. இதில் 3 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 48வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி நாளை (வெள்ளி) முதல் வரும் 29ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. இவ்விழாவை, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர், நாளை மாலை 4 மணியளவில் தொடங்கி வைக்கின்றனர். பின்னர் அவர்கள், வேளாண்மைத்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பட்டு வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் 1.50 லட்சம் மலர்களைக் கொண்டு மலர்க்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறிக் கண்காட்சிகள் அமைக்கப் பட்டு வருகின்றன. வனவிலங்குகளைப் பாதுகாத்து வனத்தை பாதுகாப்போம் என்ற உணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், வனவிலங்குகளின் வடிவமைப்புகள், மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண மலர்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றன. சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் 25,000க்கும் மேற்பட்ட வண்ணமலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இவ்விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, கலைப்பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஒருங்கிணைந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இளைஞர்களுக்கான கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட வுள்ளன. குறிப்பாக ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், கோடைவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
ஏற்காடு மலைப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றம்
ஏற்காட்டில் 48வது கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சியை முன்னிட்டு, மலைப்பாதையில் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வர வாய்ப்புள்ளது. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, நாளை முதல் ஏழு நாட்களுக்கு ஏற்காட்டிற்கு மேலே செல்லும் வாகனங்கள் தற்போதுள்ள கோரிமேடு-அடிவாரம் வழியாக செல்ல வேண்டும். ஏற்காட்டில் இருந்து கீழே இறங்கும் வாகனங்கள் கொட்டச்சேடு-குப்பனூர் வழியை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஏற்காடு கோடைவிழாவையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் சார்பில் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஏற்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, தினசரி சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு இயக்கப்படும் 12 பஸ்களுடன் கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ஏரி, பக்கோடா பாய்ண்ட், சேர்வராயன் கோயில், லேடீஸ் சீட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இரண்டு உள்வட்ட சிறப்பு பஸ்கள் கோடை விழாவை முன்னிட்டு இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் நாளை (23ம் தேதி) முதல் 29ம் தேதி வரை 7 நாட்களும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்களை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
The post ஏற்காட்டில் நாளை மாலை கோடை விழா துவக்கம்: 3 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் appeared first on Dinakaran.