
சேலம்,
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் பல்வேறு துறைகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட உள்ளன. நாளை காலை 7 மணிக்கு ஏற்காடு மலைப்பாதையில் ஆண்கள், பெண்களுக்கான மலையேற்றம் நடக்கிறது. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கத்தில் புலியாட்டம், சிலம்பாட்டம், நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளன.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான கால்பந்து போட்டியும், ஏற்காடு கலையரங்கத்தில் குழந்தைகளுக்கான இளம் தளிர் நடைப்போட்டி, அடுப்பில்லா சமையல், நடைவண்டி, உப்பு மூட்டை தூக்குதல், தவலும் போட்டிகளும் நடக்கிறது. இதையடுத்து கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
25-ந் தேதி திறந்தவெளி அரங்கத்தில் நாய்கள் கண்காட்சியும், மிமிக்கிரி, செமி கிளாசிக் நடனம், கோலாட்டம், பம்பை இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், 26-ந் தேதி காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், படகு இல்லத்தில் படகுப்போட்டியும் நடக்கிறது.
27-ந் தேதி காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் பத்திரிகையாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியும், கலையரங்கத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும், 28-ந் தேதி கதக் மற்றும் குச்சிபுடி நடனமும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும், 29-ந் தேதி கலையரங்கத்தில் நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மண்டலம் மூலம் பொதுமக்களின் வசதிக்காக ஏற்காட்டுக்கு இயக்கப்படும் 12 பஸ்களுடன் கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.