ஏரிக்கரையில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு மண் சரிவு துரித நடவடிக்கையால் பேராபத்து தவிர்ப்பு ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில்

1 month ago 6

ஆரணி, டிச.11: ஆரணி அடுத்த காமக்கூர் ஏரிக்கரையில் நேற்று மீண்டும் விரிசல் ஏற்பட்டு மண் சரிவு நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஆரணி அடுத்த செண்பகத்தோப்பு அணை நிரம்பியதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, ஆரணி உபகோட்டத்தில் உள்ள நீர்வளத்துறைக்கு சொந்தமான ஏரிகள், நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி கடந்த சில நாட்களுக்கு முன்பு முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. பின்னர், தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 6ம் தேதி ஏரிக்கரையில் திடீரென விரசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நீர்வளத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டு ஜேசிபி மற்றும் டிராக்டர்கள் மூலம் மணல் மூட்டைகள் அடுக்கி சரிசெய்து கரையை பலப்படுத்தினர்.

இந்நிலையில், நேற்று மீண்டும் ஏரிக்கரையில் விரிசல் அதிகரித்து மண்சரிவு ஏற்பட்டது. ஏரிக்கரை உடையும் நிலை ஏற்பட்டது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கோவிந்தராசு, உதவி பொறியாளர் ராஜகணபதி தலைமையில் ஏரி நீர்பாசன தலைவர் சங்கர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமண்டல நாகநதி ஆற்றில் இருந்து வெள்ளூர் பகுதியில் உள்ள காமக்கூர் அணைக்கட்டின் வழியாக ஏரிக்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஏரி உபரிநீர் வெளியேறும் பகுதியில் ஷட்டர்கள் திறந்து தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டது.

பின்னர், மணல் மூட்டைகள், தடுப்பு கட்டைகள் அமைத்தும், மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தூர்வாரி மண்ணை கொட்டி கரையை பலப்படுத்தினர். மேலும், சென்னை தரமணியில் உள்ள மண் பரிசோதனை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நிபுணர்களை வரழைத்து மண் தன்மைகள் குறித்து ஆய்வு ஏரிக்கரையில் ஆய்வு செய்து, இதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கோவிந்தராசு தெரிவித்தார். ஏரிக்கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி, கரையை உடனடியாக பலப்படுத்தியதால் 2வது முறையாக பேராபத்து, அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post ஏரிக்கரையில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு மண் சரிவு துரித நடவடிக்கையால் பேராபத்து தவிர்ப்பு ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில் appeared first on Dinakaran.

Read Entire Article