ஏதாவது ஒரு மொழியை படிக்கலாம் புதிய கல்விக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்

2 months ago 8

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட பாஜ அலுவலகத்தில், நேற்று மாலை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதிய தேசிய கல்விக்கொள்கை, இந்தியாவின் பிரபல அறிஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டது. எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் இளைஞர்கள், முழுமையான கல்வி அறிவை பெற இந்த திட்டம் உதவும். புதிய கல்வி கொள்கையில் இந்தி கட்டாயமில்லை. இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை, மாணவர்கள் 3வது மொழியாக எடுத்து படிக்கலாம் என்று தான் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவியர் 3வது மொழியை படிக்கிறார்கள்.

அதுபோன்ற நிலை அரசு பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை தான் நாங்கள் கூறி வருகிறோம். புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காததால், கல்விக்கான ஒன்றிய அரசு நிதி ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய முடியாமல் உள்ளது. புதிய கல்விக்கொள்கை குறித்து, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் 3 பக்க கடிதத்தை முதல்வருக்கு அனுப்பியுள்ளார். அதில், விரிவாக இதுபற்றி விளக்கியுள்ளார். கடந்த 10 ஆண்டில், தமிழக வளர்ச்சிக்கு மட்டும் ரூ.11 லட்சம் கோடி நிதியை பாஜ அரசு அளித்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

 

The post ஏதாவது ஒரு மொழியை படிக்கலாம் புதிய கல்விக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article