ஏணிபோட்டு மரத்தில் ஏறி சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை

3 months ago 7

நாகர்கோவில்: ஏணிபோட்டு மரத்தில் ஏறி சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அழகியமண்டபம் மலை முருங்கைத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் அருள்ராஜ் (55). கோட்டாறு போக்குவரத்துத்துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி வயோலா. இந்த தம்பதிக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது. மற்றொரு மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு கடைசியில் ஸ்டீபன் அருள்ராஜுடைய காலில் புண் வந்துள்ளது. நாளடைவில் அது பெரிதாகி நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஸ்டீபன் அருள் ராஜ் மருத்துவமனையில் பலமுறை சிகிச்சை எடுத்த பிறகும் புண்ணில் உள்ள காயம் குணமாகவில்லை. இதனால் அவதிப்பட்டு வந்தவர், பணிக்கு சென்றால் சிரமம் ஏற்படும் என்பதால் கடந்த டிசம்பர் 24ல் மெடிக்கல் லீவு எடுத்தார். விடுமுறை முடிந்து இந்த மாதத்தில் பணியில் சேரவேண்டும். ஆனால் விடுமுறைதான் முடிந்ததே தவிர, ஸ்டீபன் அருள்ராஜின் காலில் உள்ள புண் சரியாகவில்லை. மறுபடியும் விடுப்பு எடுத்தாலும் இந்த புண் குணமாகிவிடுமா? என்ற பயம் ஏற்பட்டது. மேலும் தன்னால் இனிமேல் நன்றாக நடக்கமுடியுமா எனவும் ஸ்டீபன் அருள்ராஜ் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. அவரை குடும்பத்தினர் தேற்றியுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இரவு ஸ்டீபன் அருள்ராஜ் வழக்கம்போல தனது குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். இன்று காலை வயோலா எழுந்து பார்த்தபோது ஸ்டீபன் அருள்ராஜை காணவில்லை. வீடு முழுவதும் தேடிய நிலையில், வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அங்குள்ள ஒரு மரத்தில் ஏணி வைக்கப்பட்டிருந்தது. அதனருகே சென்று பார்த்தபோது மரத்தின் பெரிய கிளையில் ஸ்டீபன் அருள்ராஜ் கயிறால் தூக்கிட்டு சடலமாக தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு மகளும், அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து ஸ்டீபன் அருள்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஸ்டீபன் அருள்ராஜ் அறையில் இருந்து ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏணிபோட்டு மரத்தில் ஏறி சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article