ஏடிஎம் கொள்ளையர்கள் விமானம், கார், கன்டெய்னரில் வந்து சென்னையில் ஒன்று கூடி திட்டம் தீட்டியது அம்பலம்

3 months ago 27

சேலம்: கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு கன்டெய்னரில் தப்பி வந்த அரியானா கொள்ளையர்களில், ஒருவன் நாமக்கல்லில் என்கவுன்டர் செய்யப்பட்டான். கைதான 6 பேரிடம் நடந்த விசாரணையில், அக்கும்பல், 6 மாநிலங்களில் 15 இடங்களில் ஏடிஎம்களை உடைத்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் 6 மாநில போலீசாரும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூரில் 3 இடங்களில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான 3 ஏடிஎம்களை நேற்று முன்தினம் அதிகாலை, முகமூடி அணிந்து வந்த கொள்ளை கும்பல் உடைத்து, ₹67 லட்சத்தை கொள்ளையடித்து, கன்டெய்னர் லாரியில் ஏற்றி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்திற்கு வந்தபோது, சேலம் மாவட்ட எல்லையில் சங்ககிரி போலீசார், சன்னியாசிபட்டி கேட் பகுதியில் மடக்கினர். இதில் போலீசாரை தாக்கி தப்பியோட முயன்றபோது என்கவுன்டரில் அரியானா மாநிலம் பல்வால் மாவட்டம் அந்துரோல கிராமத்தை சேர்ந்த ஜூமாந்தின் (37) சுட்டு கொல்லப்பட்டார். முகமது ஹஸ்ரு (எ) அஜர்அலி (30) குண்டு காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கன்டெய்னரில் இருந்த இர்பான், சவுக்கீன்கான், முகமது இக்ரம், சபீர், முபாரக் ஆகிய 5 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்து, கன்டெய்னரில் இருந்து ஒரு கிரிட்டா சொகுசு கார், ₹67 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கைதான 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து எஸ்பி ராஜேஸ்கண்ணன் நேற்று அளித்த பேட்டியில், ‘கைது செய்யப்பட்டுள்ள 6 பேர் மீதும் வெவ்வேறு மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. ஒரு சிலருக்கு பல மாநிலங்களில் வழக்குகள் உள்ளது. சிலர் மகராஷ்டிரா மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து வந்துள்ளனர். இதுவரை ஏடிஎம் சென்டர்களில் எவ்வளவு பணம் கொள்ளையடித்துள்ளனர் என்பது அந்தந்த மாநில போலீசாருக்குத்தான் தெரியும். கொள்ளையர்களில் 3வது வரை மட்டும் படித்தவர்களும் இருக்கிறார்கள். நிறைய படித்தவர்களும் இருக்கிறார்கள். . என்கவுன்டரில் பலியான ஜூமாந்தின் மற்றும் முபாரக் ஆகியோர் டெல்லியில் இருந்து கன்டெய்னரில் சரக்கு ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வந்துள்ளனர். இர்பான், முகமது இக்ரம், அஜர்அலி ஆகியோர் டெல்லியில் இருந்து காரில் சென்னைக்கு வந்துள்ளனர்.

சவுக்கீன்கான், சபீர் ஆகியோர் டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்கள் 7 பேரும் சென்னையில் ஒரு இடத்தில் கூடி எங்கெங்கு கொள்ளையடிக்கவேண்டும் என திட்டமிட்டு, பின்னர் திருச்சூர் சென்று கைவரிசை காட்டியுள்ளனர். இவர்களிடம் விமான டிக்கெட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கும்பல் திருச்சூரில் கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன் ஆந்திர மாநிலம் கடப்பாவிலும், தெலங்கானா, கர்நாடகாவிலும் கடந்த ஒரு மாதத்திற்குள் 9 இடங்களில் எஸ்பிஐ ஏடிஎம்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அதில் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியதும், பிறகு அந்த பணத்தை சொந்த மாநிலமான அரியானாவிற்கு கொண்டு சென்றுள்ளனர். இவர்கள், இதுவரை மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 15 இடங்களில் ஏடிஎம்களை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர். கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைக்கப்படுவார்கள். பின்னர் தேவைப்பட்டால் காவலில் எடுத்து விசாரிப்போம். பறிமுதல் செய்த ₹67 லட்சத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிடுவோம். இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில், பிடிபட்ட 6 கொள்ளையர்கள் மீது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டிவந்தது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, கொலை முயற்சி, சட்டவிரோதமாக பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல், பொது சொத்திற்கு சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்கவுன்டர் செய்யப்பட்ட ஜூமாந்தின் உடலை நாமக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று மதியம் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

கொள்ளையன் உடலை பெற விமானத்தில் வந்த உறவினர்கள்
என்கவுன்டரில் பலியான ஏடிஎம் கொள்ளையன் ஜூமாந்தின் உடலை பெற அரியானா மாநிலம் பல்வால் மாவட்டம் அந்துரோல கிராமத்தில் இருந்து அவரது சகோதரர் முஸ்தாக் உள்ளிட்ட 5 பேர் நேற்று மதியம் நாமக்கல் வந்தனர். இவர்கள், அரியானாவில் இருந்து டெல்லி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் கோவை வந்து, பிறகு காரில் நாமக்கல் வந்தடைந்தனர். மாலையில், பிரேதப்பரிசோதனை முடிந்ததும், ஜூமாந்தின் உடலை அவர்கள் பெற்றுக்கொண்டனர். விமானம் மூலம் சொந்தஊருக்கு உடலை கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தகவல் கிடைத்தவுடன், அரியானாவில் இருந்து விமானத்தில் வரும் அளவிற்கு ஜூமாந்தின் குடும்பத்தினர் வசதியாக உள்ளனர். இந்த வசதி வாய்ப்பை பல்வேறு மாநிலங்களில் ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மூலம் பெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

₹10 கோடி கைவரிசை?
திருச்சூரில் ஏடிஎம்களை உடைத்தது போல் பல்வேறு பகுதிகளில் கொள்ளையடித்த பணம், கன்டெய்னரில் இருந்ததாக பரவலாக பேசப்பட்டது. இதேபோல் போலீசார் ₹1 கோடிக்கு மேல் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. இது குறித்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் கூறுகையில், ‘‘திருச்சூர் போலீசார் ₹67 லட்சம் வரை கொள்ளை போனதாக எங்களிடம் தெரிவித்தனர். இது முழுக்க, முழுக்க திருச்சூர் போலீசார் தொடர்புடையது. எங்களை பொறுத்தவரை பணத்தை முறையாக கோர்ட்டில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்,’’ என்றார்.

இந்தியாவின் முக்கிய நகரங்களை அதிர வைத்த ‘மேவாட்’ கொள்ளையர்
அரியானா மாநிலத்தில் உள்ள மேவாட் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கிராமத்தை மையமாக கொண்டு செயல்படுவதால் இவர்கள் ‘மேவாட் கொள்ளையர்கள்’ என்று இதர மாநில போலீசாரால் அழைக்கப்படுகின்றனர். இந்த கிராமம் முழுவதும் கொள்ளையர்களே நிறைந்துள்ளனர். ஒரே பிரிவை சேர்ந்த இவர்கள், தனித்தனி குழுக்களாக பிரிந்து திட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றுவதில் கை தேர்ந்தவர்கள். நாட்டின் எந்த பகுதிக்கு சென்று கைவரிசை காட்டினாலும் ஓரிரு நாளில் சொந்த ஊருக்கு திரும்பி விடுவார்கள்.

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு குடும்பத்தினர் மட்டுமே கொள்ளையில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது ஒட்டு மொத்த கிராமமும் கொள்ளையை தொழிலாக கொண்டுள்ளது. இதற்காக தனியாக நெட்வொர்க் அமைத்து செயல்படுகின்றனர். மேவாட் கொள்ளையர்கள் இருக்கும் பகுதிக்கு போலீசார் எளிதில் நுழைய முடியாது. மேவாட் கொள்ளை கும்பலை சேர்ந்த யாரேனும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டாலும் அவர்களுக்காக வாதாட தனி வழக்கறிஞர் குழுவும் உள்ளது. தேவைப்பட்டால் அவர்கள் செய்த குற்றங்களை ஏற்று சரண் அடைய ஒரு கூட்டம் இருப்பதாகவும் திடுக்கிடும் தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொள்ளை சம்பவங்கள் நிகழ்த்துவதில் திட்டமிட்டு செயல்படும் மேவாட் கொள்ளையர்கள், போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்கு தினமும் 5 கிலோ மீட்டர் ஓட்டப்பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகளை எடுத்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு சென்னை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்களை குறி வைத்து கொள்ளை அடித்ததும் மேவாட் கும்பல்தான் என்ற அதிர்ச்சி தகவல்களும் தெரியவந்துள்ளது. இவர்கள் தொழில்நுட்பங்களில் கைத்தேர்ந்தவர்கள். இதற்காக கிராமத்து இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

The post ஏடிஎம் கொள்ளையர்கள் விமானம், கார், கன்டெய்னரில் வந்து சென்னையில் ஒன்று கூடி திட்டம் தீட்டியது அம்பலம் appeared first on Dinakaran.

Read Entire Article