ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்த எஸ்.பி, போலீசாரை பாராட்டி டிஜிபி பரிசு

1 month ago 10

நாமக்கல்: வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்த நாமக்கல் எஸ்பி, டிஎஸ்பி உள்பட 23 பேருக்கு டிஜிபி வெகுமதி வழங்கி பாராட்டினார். கேரள மாநிலம் திருச்சூரில் 3 இடங்களில் பொதுத்துறை வங்கி ஏடிஎம்களில் கொள்ளையடித்து விட்டு, கன்டெய்னர் லாரியில் நாமக்கல் மாவட்டம் வழியாக தப்ப முயன்ற வடமாநில கொள்ளையர்களை, குமாரபாளையம் அருகே போலீசார் மடக்கினர். அப்போது கொள்ளையர்கள் போலீசாரை தாக்கியதில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. ரஞ்சித் ஆகியோர் காயமடைந்தனர்.

தற்காப்புக்காக கொள்ளையர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில் கொள்ளையன் ஜூமாந்தின் (37), என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு கொள்ளையன் ஹஸ்ரு (எ) அஜர் அலியை (28), போலீசார் சுட்டு பிடித்தனர். கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த இன்ஸ்பெக்டர், எஸ்ஐ இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கான வெகுமதி, பாராட்டு சான்றிதழை அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கினார்.

தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த போலீஸ் அதிகாரிகள், ஏட்டுகள், போலீசார் என 23 பேருக்கு டிஜிபி சங்கர்ஜிவால், வெகுமதி அளித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பின்னர், டிஜிபி சங்கர்ஜிவால் நிருபர்களிடம் கூறுகையில், ‘நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்தது ஒட்டுமொத்த தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது’ என்றார். இந்நிகழ்ச்சியில், கோவை மண்டல ஐஜி செல்வ குமார், சேலம் சரக டிஐஜி உமா, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்த எஸ்.பி, போலீசாரை பாராட்டி டிஜிபி பரிசு appeared first on Dinakaran.

Read Entire Article