ஏசி உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் அரசு நூலகங்களை மேம்படுத்த திட்டம்: அதிகாரிகள் தகவல்

1 week ago 4


சென்னை: அதிநவீன வசதிகளுடன் அரசு நூலகங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு நூலகங்கள் 40 வருடம் பழைமை வாய்ந்தவையாக உள்ளன. இந்த நூலகங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வடசென்னையில் உள்ள திரு.வி.க.நகர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம், ஆர்.கே.நகர் உள்ளிட்ட 10 நூலகங்கள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர, கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும் வண்ணம் வறுமை கோட்டில் பின் தங்கிய பகுதியில் இருக்கும் மாணவர்களின் நலன் கருதில் கொண்டு கூடுதலாக ரூ.30 கோடி மதிப்பீட்டில் 9 நூலகங்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்த நூலகங்களை சமீபத்தில் அமைச்சர் சேகர்பாபு, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அஸ்சுல் மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கூறியதாவது: போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தகுந்த சூழலை உருவாக்கும் வண்ணம் பழைமையான நூலகங்களின் உட்கட்டமைப்பை அதிநவீன வசதிகளுடன் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும், இந்த நூலகங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தபடி, குளிரூட்டும் அறைகளுடன் அமைக்க உள்ளோம். இதில் தரைத்தளத்தில் முதியோர்களுக்காகவும், முதல் தளத்தில் பள்ளி – கல்லூரிகள் மாணவர்கள் படிக்கும் வகையிலும் நூலகத்தை கட்ட திட்டமிட்டுள்ளோம். அதேபோல், மிகவும் பழமையான நூலகத்தை இடித்து புதிதாக கட்டவும் முடிவு செய்துள்ளோம். அதன்படி, புனரமைப்பு பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதமும், புதிய நூலக கட்டிட பணிகள் அடுத்தாண்டு டிசம்பர் மாதமும் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். மேலும், தேவைப்படும் நூலகங்களில் அலுவலக இடங்களும் அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post ஏசி உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் அரசு நூலகங்களை மேம்படுத்த திட்டம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article