*அறிவியல் கருத்தரங்கில் வலியுறுத்தல்
ஊட்டி : ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மனித குலத்தின் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவியல் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சசிகுமார் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: கடந்த 300 ஆண்டுகளில் அறிவியலின் வளர்ச்சி இந்த உலகத்தையே புரட்டிப்போட்டு உள்ளது என்று கூறலாம்.
கலிலியோ முதன் முதலில் கோள்கள் யாவும் சூரியனையே சுற்றி வருகின்றன என்று அறிவித்த நாள் முதல் இன்று வரை பிரபஞ்சம் ஒன்று மட்டுமல்ல பல கோடி கணக்கான பிரபஞ்சங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான இயற்பியல் விதிகள் இருக்கலாம் என கண்டறியப்பட்டு வானியல் விரிவடைந்துள்ளது.
மனித இனம் ஒரு குறுகிய காலத்தில் படைக்கப்பட்டது என்று மக்கள் நம்பிய காலத்தில் டார்வின் தனது பரிணாமக்கொள்கையின் மூலம் மனித குலம் குரங்கு குடும்பத்தில் ஒரு கிளையாக தோன்றியது தான் என்று கண்டறிந்த நாள் முதல் இன்றைய மரபணு கண்டுபிடிப்புகள் புதிய உயிரினங்களை ஆய்வகத்திலேயே உருவாக்கலாம் என்பது வரை வளர்ந்துள்ளது.
புரிந்து கொள்ள முடியாத மிக சிக்கலான மனித மனத்தை சிக்மன்ட் பிராய்டு விளக்கி கூறினார். அதன் விளைவாக இன்று மனமும் மனித மூளையின் ஒரு சிறு பகுதியின் செயல்பாடு தான் என அறிவியல் கண்டறிந்துள்ளது. இன்றைய காலநிலை மாற்றத்தை அறிவியல் துல்லியமாக கண்டறிந்துள்ளது.
அதன் தாக்கத்தை குறைக்கும் வகையில் அதிக அளவு கார்பனை உட்கொள்ளும் அதிக பரப்பளவு உள்ள இலைகளை கொண்ட தாவரங்களை மரபணு மாற்றம் தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து உள்ளது.
மருத்துவத்துறையில் ஒவ்வொரு தனி மனிதனும் சிறப்பான தன்மை கொண்டவர் என்ற வகையில் அவரது மரபணுவை கொண்டு தனிப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்து கொடுக்கும் அறிவியல் இன்று வேகமாக வளர்ந்து வருகிறது.
நவீன தொழில் நுட்பமான ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மனித மூளையில் உள்ள 10 ஆயிரம் கோடி நியூரான்களின் செயல்பாடுகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸின் தந்தை எனப்படும் ஹின்டன், அண்மையில் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பது அணுகுண்டு கண்டுபிடிப்புக்கு இணையானது என்று கூறியுள்ளார்.
இந்த செயற்கை நுண்ணறிவு மனித மூளையை விட சிறப்பானதா? இதனால், மனித குலத்திற்கு வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்படுத்துமா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு அவர் ஆம் என்றே பதில் அளித்துள்ளார். ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மனித குலத்தின் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், இன்று பெரும் அளவில் ராணுவத்திற்கு பயன்படுத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது.
மாணவர்கள் வளர்ந்து வரும் அறிவியல் துறைகளை பற்றி அறிந்து கொண்டு என்ன படிக்க வேண்டும் எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என புரிந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை வளப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக முதுகலை ஆசிரியர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.
The post ஏஐ தொழில் நுட்பத்தை மனித குலத்தின் நன்மைக்கு பயன்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.