
ஒவ்வொரு வங்கிகளும் தங்கள் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும்போது வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றுகின்றன. ஒரு சில வங்கிகள் நாள் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும், சில வங்கிகள் ரூ.50 ஆயிரமும் எடுக்க அனுமதி வழங்கியுள்ளன. ஏ.டி.எம். கார்டுகளின் வகைப்பாட்டினை பொறுத்து இந்த வேறுபாடு உள்ளது.
ஒரு மாதத்திற்கு 5 முறை ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணமோ, இதர வசதிகளையோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. அதற்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறைக்கும் தற்போது ரூ.21 சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் நாளை (மே 1) முதல் ரூ.23 ஆக உயர்த்தப்பட இருப்பதாக ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.
அதன் அடிப்படையில், நாளை முதல் தங்களது வாடிக்கையாளர்களிடம் கூடுதல் சேவை கட்டணத்தை வசூலிக்க வங்கிகள் தயாராகி வருகின்றன. ஆனால், ஏ.டி.எம். கார்டு பயன்பாட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்றாலும், நாளை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.