எஸ்பி அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு கூட்டம் திருட்டுப்போன ₹6.60 கோடி மதிப்பிலான 3,085 செல்போன்கள் மீட்பு

3 weeks ago 5

*சித்தூர் எஸ்பி பேச்சு

சித்தூர் : சித்தூர் எஸ்பி அலுவலக வளாகத்தில், நேற்று எஸ்பி மணிகண்டா தலைமையில் வருடாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சித்தூர் நகர டிஎஸ்பி சாய்நாத், பலமநேர் டிஎஸ்பி பிரபாகர், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எஸ்பி மணிகண்டா பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர ஆய்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஆய்வு கூட்டம் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2023 மற்றும் 24ம் ஆண்டு நடந்த குற்ற செயல்கள் மற்றும் காவல்துறை சார்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் குற்ற செயல்களை தடுத்து, சித்தூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது இதற்காக மாநில டிஜிபியிடம் இருந்து மதிப்புமிக்க ஏபிசிடி விருதை பெற்றுக் கொண்டேன். அதேபோல் சித்தூர் மாவட்டத்தில் சமூகக் காவல் பலப்படுத்தப்பட்டு மக்களின் ஒத்துழைப்புடன், அமைதியும், பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டது.

மாவட்டம் முழுவதும் ‘ஸ்மார்ட் அலாரம் பேட் லாக்ஸ்’ விநியோகம் செய்து திருட்டுகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி இதுவரை 10 ஆயிரம் அலாரம் பேட்லாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.

சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பெண்களிடையே ஏற்படுத்தப்பட்டது. சித்தூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.

வாக்குப்பதிவு மற்றும் எண்ணும் பணி எந்தவித கலவரமும் இன்றி அமைதியான சூழலில் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். இந்த ஆண்டில் திருட்டுபோன ₹6 கோடியே 60 லட்சம் மதிப்பிலான 3085 செல்போன்கள் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2024ம் ஆண்டில் ₹26 லட்சம் சைபர் மோசடியில் இருந்து மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய 651 பேர் பிடிபட்டனர், அவர்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் ரூ.65.10 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்க சிறப்பு குடும்ப ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சித்தூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் குற்ற செயல்கள் தடுக்க 1,500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு நடந்த குற்ற செயல்களை விட இந்த ஆண்டு குற்றச் செயல்கள் குறைந்துள்ளது. வரும் 2025ம் ஆண்டில் குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post எஸ்பி அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு கூட்டம் திருட்டுப்போன ₹6.60 கோடி மதிப்பிலான 3,085 செல்போன்கள் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article