சென்னை: 2023ம் ஆண்டு நடந்த 621 எஸ்ஐ தேர்வில் நடந்த குளறுபடிகளை நீக்கி வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என காவல்துறை வாரிசுதாரர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் காவல்துறை வாரிசுதாரர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வினோத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 621 எஸ்ஐ பணியிடங்களுக்கு கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ பரிசோதனை மற்றும் காவல் பரிசோதனை போன்ற அனைத்து கட்டங்களையும் கடந்து பயிற்சிக்கு தயாராக இருந்தோம். அப்போது உயர் நீதிமன்றம் தேர்வு முறையில் இடஒதுக்கீடு பிரச்னை இருப்பதாகவும், இதை சரி செய்ய சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டது.
இதன் பின்னர் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி 3 மாதத்தில் மீண்டும் முதல் படி நிலையில் இருந்து 2வது தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் முதல் பட்டியலில் தேர்வான 41 பேரை நீக்கி விட்டு புதிதாக 41 பேர் சேர்க்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட முதல் பட்டியலில் இருந்து 41 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 621 எஸ்ஐ தேர்வில் 41 பேர் நீங்கலாக வெற்றி பெற்ற மீதமுள்ள 580 பேர் பயிற்சிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தமிழக அரசு 2023ம் ஆண்டு தேர்வு வெளியிட்டபடி 621 எஸ்ஐ பணியிடங்களுக்கு முறையாக தேர்வு முடிவுகள் வெளியிடும் வரை தற்போது வெளியிடப்பட்ட 1,299 எஸ்ஐ தேர்வுக்கான விண்ணப்ப ஆணையை ரத்து செய்ய வேண்டும். எனவே தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு 621 எஸ்ஐ தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணியில் சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post எஸ்ஐ தேர்வில் நடந்த குளறுபடிகளை நீக்கி வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.