ஜோகன்னஸ்பர்க்: எஸ்ஏ20 டி20 கோப்பைக்கான தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை 76 ரன் வித்தியாசத்தில் எம்ஐ கேப்டவுன் அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் 6 உள்நாட்டு அணிகள் இடையே எஸ்ஏ20 டி20 போட்டிகள் நடந்து வந்தன. இதன் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு நடந்தது. டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய ரஸி வான் டெர் துசென் 23, ரையான் ரிக்கெல்டன் 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்தோரில் கானர் எஸ்டர்ஹுசென் 39, ஜார்ஜ் லிண்டே 20, டிவால்ட் பிரெவிஸ் 38 ரன் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர். இதனால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழந்து 181 ரன் குவித்தது.
அதைத் தொடர்ந்து 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் பெடிங்காம் 5, டோனி டி ஸோர்ஸி 26 ரன்னில் அவுட்டாகி வலுவான அடித்தளம் அமைக்கத் தவறினர். பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் அந்த அணி, 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன் எடுத்தது. இதனால், 76 ரன் வித்தியாசத்தில் எம்ஐ கேப்டவுன் அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆகி கோப்பையை கைப்பற்றியது. 9 ரன் மட்டுமே தந்து 2 விக்கெட் வீழ்த்திய டிரென்ட் போல்ட் ஆட்ட நாயகன். சன்ரைசர்ஸ் அணியின் மார்கோ ஜேன்சன் தொடர் நாயகன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக எஸ்ஏ20 தொடரை வென்று சாதனை படைத்திருந்த சன்ரைசர்ஸ் அணி, 3வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கத் தவறி உள்ளது.
The post எஸ்ஏ20 டி20 இறுதிப் போட்டி எம்ஐ கேப்டவுன் சாம்பியன்: ‘ஹாட்ரிக்’ தவறவிட்ட சன்ரைசர்ஸ் appeared first on Dinakaran.