கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 தொடரான எஸ்.ஏ.டி20 லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாப் டு பிளெஸ்சிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், ரஷீத் கான் தலைமையிலான எம்.ஐ. கேப்டவுனை எதிர் கொண்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கான்வே - பாப் டு பிளெஸ்சிஸ் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். கான்வே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த டு பிளெஸ்சிஸ் அதிரடியாக விளையாடினார். கான்வே 35 ரன்களிலும், டு பிளெஸ்சிஸ் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜானி பேர்ஸ்டோவ் (43 ரன்கள்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை. இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் அடித்தது. எம்.ஐ. கேப்டவுன் தரப்பில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய எம்.ஐ. கேப்டவுன் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் ஆன ரியான் ரிக்கல்டன், சூப்பர் கிங்சின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த வான் டெர் துசன் 39 ரன்களும், ரீசா ஹென்ட்ரிக்ஸ் 34 ரன்களும் அடித்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிக்கல்டன் 89 ரன்களில் (39 பந்துகள்) இலக்கை நெருங்கிய தருவாயில் ஆட்டமிழந்தார்.
வெறும் 15.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த எம்.ஐ. கேப்டவுன் 173 ரன்கள் அடித்தது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்சை வீழ்த்திய எம்.ஐ. கேப்டவுன் அபார வெற்றி பெற்றது. ரிக்கல்டன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.