எல்லையில் பாக். தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்: குஜராத் உட்பட 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை: முப்படை தளபதிகளும் சந்திப்பு

9 hours ago 2

புதுடெல்லி: எல்லையில் பாகிஸ்தான் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் நடத்துவதால் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்துக்கு ‘அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனை நடத்தினார். சண்டிகரில் ‘சைரன்கள்’ ஒலிக்கப்பட்டதால் வீடுகளில் மக்கள் தஞ்சமடைந்ததால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் அதிரடியால் ஆடிப்போன பாகிஸ்தான், தற்போது எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லைகளில் போர் விதி மீறல்களை அரங்கேற்றி வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொள்ள முயன்றது.

ஆனால் இந்தியாவின் எஸ்-400 சுதர்ஷன் சக்ரா என்ற வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த எதிர்-யுஏஎஸ் கட்டமைப்பு, ஜம்மு, பதான்கோட், உதம்பூர், ஜெய்சல்மர், புஜ் உள்ளிட்ட 15 இடங்களை குறிவைத்த 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் எட்டு ஏவுகணைகளை இடைமறித்து வெற்றிகரமாக அழித்தது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம், இந்த தாக்குதல்களால் எந்த உயிரிழப்பு அல்லது பொருள் சேதமும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தியது. பாகிஸ்தானின் இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் குறிவைத்த 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் எட்டு ஏவுகணைகளை இடைமறித்து வெற்றிகரமாக அழித்தது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம், இந்த தாக்குதல்களால் எந்த உயிரிழப்பு அல்லது பொருள் சேதமும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தியது.

பாகிஸ்தானின் இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்கள் உயர் எச்சரிக்கையில் (அலர்ட்) வைக்கப்பட்டுள்ளன. பஞ்சாபில் அமிர்தசரஸ், தரன் தரன், குருதாஸ்பூர், ஃபெரோஸ்பூர், ஃபாஸில்கா மற்றும் பதான்கோட் மாவட்டங்களில் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் பார்மர், ஜெய்சல்மர், ஜோத்பூர், பிக்கானீர் மற்றும் ஸ்ரீகங்காநகர் மாவட்டங்களில் இரவு நேரத்தில் முழு மின்தடை (பிளாக்அவுட்) அமல்படுத்தப்பட்டு, ட்ரோன் பறப்பதற்கும் பட்டாசு வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் புஜ் மற்றும் கட்ச் மாவட்டங்களில் எல்லைப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் சம்பா, ரஜோரி மற்றும் ஆர்.எஸ்.புரா பகுதிகளில் முழு மின்தடை மற்றும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளன.

இந்த ரெட் அலர்ட் உத்தரவுகளானது, பாகிஸ்தானின் தொடர்ச்சியான தாக்குதல் முயற்சிகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக அமைந்துள்ளது. இந்திய ராணுவம், இன்று பாகிஸ்தான் ட்ரோன்களை முறியடித்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு, தனது தொழில்நுட்ப திறன் மற்றும் தயார்நிலையை வெளிப்படுத்தியது. இருப்பினும், பாகிஸ்தானின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் எல்லையோர மாநில பதற்றங்களின் தீவிரத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை போருக்கு முந்தைய எச்சரிக்கை ஒலியாக, சண்டிகரில் வான்வழி எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டது. மக்கள் வீட்டிற்குள் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றங்கள் தீவிரமடைந்த நிலையில், விமானப்படை நிலையத்திலிருந்து பதிலடி தாக்குதல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், இந்த சைரன் ஒலி நடவடிக்கை எடுக்கப்பட்டது. சண்டிகர் துணை ஆணையர் நிஷாந்த் குமார் யாதவ், மக்கள் அனைவரும் வீடுகளின் உட்புறங்களில் இருக்கவும், பால்கனிகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தினார்.

மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டாலும், சண்டிகரில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 7ம் தேதி சண்டிகரில் மின்தடை (பிளாக்அவுட்) செய்து போர் ஒத்திகை நடத்தப்பட்டது. தற்போதைய சைரன்கள் ஒலி, உண்மையான அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கையாக இருக்கலாம் அல்லது மற்றொரு போர் ஒத்திகை பயிற்சியின் பகுதியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் வீசிய கனரக குண்டுவீச்சு சம்பவத்தில், இந்தியாவை சேர்ந்த ரூபி கவுர் என்ற பெண் உயிரிழந்தார். பூஞ்சின் மேந்தர் துணைப்பிரிவில் உள்ள மங்கோட் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்தது; இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்ததாக அஞ்சப்படுகிறது.

இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டு, பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து அழித்தது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட், மேந்தர், மங்கோட், கிருஷ்ணா காட்டி, குல்பூர், கெர்னி மற்றும் பூஞ்ச் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டதால், வீடுகள் சேதமடைந்தன. உள்ளூர் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சந்தக், லஸ்ஸானா, சனை, சத்ரா பகுதிகளில் தற்காலிக முகாம்களை அமைத்துள்ளது. நாடு முழுவதும் ேபார் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று டெல்லியில் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

அப்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லைப் பதற்றங்கள், ஆபரேஷன் சிந்தூரின் பதிலடி நடவடிக்கைகள், பாகிஸ்தானின் ட்ரோன், ஏவுகணைகளை வீழ்த்தியது குறித்தும், அடுத்தகட்ட பதிலடி குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் எல்லைப் பாதுகாப்பு, ராணுவத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், பாகிஸ்தானின் சாத்தியமான பதிலடிகளை எதிர்கொள்ளும் உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் பிரதமர் மோடியின் தலைமையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவும் இன்று காலை கூடியது. இந்த கூட்டத்தில் ராஜ்நாத் சிங் முக்கிய பங்காற்றினார். ஆபரேஷன் சிந்தூரின் தற்போதைய நிலை, பாகிஸ்தானின் லாகூர், சியால்கோட் பகுதிகளில் இந்தியாவின் பதிலடி தாக்குதல்கள், எல்லையோர மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்த ஆலோசனைகள், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உறுதிப்பாட்டையும், எல்லையில் தொடர்ந்து நிலவும் பதற்றங்களை கையாள்வதற்கான உத்தியையும் வகுத்ததாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய வான்பாதுகாப்பை வலுப்படுத்திய எல்-70, ஜு-23மிமீ, ஷில்கா, எஸ்-400;
ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் இருக்கும் இந்திய ராணுவ இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் தரப்பில் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் எட்டு ஏவுகணைகளை அனுப்பப்பட்டது. இந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு, எஸ்-400 சுதர்ஷன் சக்ரா, எல்-70 பீரங்கிகள், ஜு-23மிமீ, ஷில்கா ஆகிய இடைமறிப்பு ஆயுத அமைப்புகள் வெற்றிகரமாக முறியடித்தன. எஸ்-400 வான்பாதுகாப்பு அமைப்பானது, 600 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைக் கண்டறிந்து, 400 கிமீ தொலைவில் உள்ள ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்டது. இந்திய விமானப்படை இந்த அமைப்பை பயன்படுத்தி, ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், புஜ் உள்ளிட்ட 15 இடங்களை குறிவைத்த தாக்குதல்களை தடுத்தது. எல்-70 பீரங்கிகளானது, ஸ்வீடனின் போஃபோர்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 40 மிமீ வான் எதிர்ப்பு ஆயுதமாகும். நவீன ரேடார் மற்றும் ஆட்டோ-டிராக்கிங் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டு, நிமிடத்திற்கு 240-330 சுற்றுகள் வீசி, 4,000 மீட்டர் தொலைவில் உள்ள ட்ரோன்களை அழிக்கும் சக்தி கொண்டது. ஜு-23மிமீ, ரஷ்யா தயாரிப்பு இரட்டை-பீப்பாய் பீரங்கியாகும்; இது 2,000 சுற்றுகள்/நிமிட வேகத்தில் 2.5 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும். ஷில்கா (ஜிஎஸ்யு-23-4), நான்கு 23 மிமீ ஆட்டோகேனன்களுடன் கூடிய ரேடார் அமைப்பாகும்; இது 20 கிமீ தொலைவில் இலக்குகளைக் கண்டறிந்து, நிமிடத்திற்கு 4,000 சுற்றுகள் வரை வீசும். இந்த அமைப்புகள், குறுகிய தூரத்தில் கும்பலாக வரும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளக் கூடியவை. மேற்கண்ட ஆயுதங்கள் இந்திய வான் பாதுகாப்பை வலுப்படுத்தின.

The post எல்லையில் பாக். தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்: குஜராத் உட்பட 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை: முப்படை தளபதிகளும் சந்திப்பு appeared first on Dinakaran.

Read Entire Article