பீஜிங்: கடந்த 2020ம் ஆண்டில் கிழக்கு லடாக்கின், கல்வான் பள்ளத்தாக்கில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியா – சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். பதிலுக்கு இந்திய ராணுவம் தாக்கியதில் ஏராளமான சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் கடும் சீர்குலைவு ஏற்பட்டது. பதற்றம் காரணமாக, இருநாட்டு ராணுவத்தினரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது.
இந்த பிரச்னையை தீர்க்க இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்த நிலையில், கடந்த மாதம் எல்லையில் ரோந்து மற்றும் படை விலகல் தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்த கிழக்கு லடாக் எல்லை பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் சீன ராணுவ அதிகாரி வூ கியான பேட்டியளிக்கையில்,‘‘ இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிழக்கு லடாக்கில் 4 ஆண்டுகளாக நீடித்து வந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.சமீபத்தில் லாவோஸில் நடந்த பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாகவும்,பலனளிப்பதாகவும் அமைந்தது. இரு தரப்பினரும் அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தி வருகின்றனர்.இதில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
The post எல்லை பிரச்னையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: சீன ராணுவ அதிகாரி பேட்டி appeared first on Dinakaran.