வெலிங்டன்,
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்றது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து 259 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 45.3 ஓவர்களில் 156 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னெர் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டாம் லதாம் 86 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் சுந்தர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய 2-வது இன்னிங்சில் வெறும் 245 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த இந்த போட்டியில் நியூசிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சாண்ட்னெர் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 77 ரன்கள் அடித்தார்.
இந்தியாவின் இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் மொத்தமாக விக்கெட்டுகளை பறிகொடுத்ததே முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் என்றாலே ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ள கூடியவர்கள் என்பது பேச்சு வழக்கு என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல் கூறியுள்ளார். ஆனால் அது சச்சின், கங்குலி காலத்துடன் முடிந்து விட்டதாக தெரிவிக்கும் அவர் இப்போதைய இந்திய பேட்ஸ்மேன்களின் உண்மை நிலையை விமர்சித்தது பின்வருமாறு:-
"இந்த நவீன இந்திய வீரர்கள் உலகின் மற்றவர்களை காட்டிலும் சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளக்கூடியவர்கள் என்ற கண்ணோட்டம் இருக்கிறது. உண்மையில் அவர்கள் அப்படி கிடையாது. அவர்களும் உலகின் மற்ற பேட்ஸ்மேன்களை போன்றவர்களே. கங்குலி, கம்பீர், லக்ஷ்மன், டிராவிட் ஆகியோரது காலத்துடன் அது முடிந்தது. ஸ்பின்னர்களுக்கு எதிராக சச்சின் சிறந்தவர். அந்த சகாப்தத்துடன் அது முடிந்தது. உண்மையில் இந்திய ஸ்பின்னர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தரமாக செயல்படுகிறார்கள். ஆனால் அவர்களது பேட்ஸ்மேன்கள் அவ்வளவு தரம் இல்லை. இதற்கு காரணம் ஐபிஎல் தொடரில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சை பார்த்தால் உடனே அவர்கள் புகார் செய்கின்றனர்" என்று கூறினார்.