எல்.ஐ.சி இணையதளத்தின் வாயிலாக இந்தியைத் திணிக்கத் துடிப்பதா?.. ராமதாஸ் கண்டனம்

2 hours ago 2

சென்னை: எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எல்.ஐ.சியின் இணைய தளத்தின் முகப்புப் பக்கம் இதுவரை ஆங்கில மொழியில் இருந்த நிலையில் இப்போது இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. இது பிற மொழி பேசும் மக்கள் மீதான அப்பட்டமான இந்தித் திணிப்பு ஆகும். எல்.ஐ.சி நிறுவனத்தின் இந்த இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மக்களும் எல்.ஐ.சியின் வாடிக்கையாளர்களாக இருக்கும் நிலையில், இந்திக்கு மட்டும் திடீர் முன்னுரிமை அளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ரூ.10 மதிப்புள்ள நுகர்வோர் பொருட்கள் கூட தமிழ்நாட்டுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் போது அதன் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் தான் அச்சிடப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ள எல்.ஐ.சி அதன் இணையதளத்தின் முதன்மைப் பக்கத்தை இந்தியில் மட்டும் வைத்திருப்பதும், ஆங்கில மொழிச் சேவை வேண்டும் என்றால் அதை தேடிச் சென்று தேர்வு செய்ய வேண்டிய சூழலை உருவாக்கியிருப்பதும் தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.

ஒன்றிய அரசும், ஒன்றிய அரசின் நிறுவனங்களும் காலம் காலமாக தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் மீது தொடர்ந்து இந்தியைத் திணிக்க முயன்று வருகின்றன. இந்த முயற்சியில் அவை பல முறை சூடுபட்டாலும் கூட, அந்த முயற்சியை மட்டும் கைவிடுவதில்லை. ஒன்றிய அரசாக இருந்தாலும், எல்.ஐ.சியாக இருந்தாலும் தாங்கள் அனைத்து மக்களுக்கும் உரித்தானவர்கள், இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் சொந்தமானவர்கள் அல்ல என்ற அடிப்படையை உணர வேண்டும். எல்.ஐ.சி இணையதளத்தின் முகப்புப் பக்கத்தை உடனடியாக ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டும். இணைய தளத்தில் இப்போது இந்தி, ஆங்கிலம் ஆகிய இருமொழிச் சேவைகள் மட்டுமே உள்ள நிலையில் தமிழ்மொழிச் சேவையையும் எல்.ஐ.சி உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

The post எல்.ஐ.சி இணையதளத்தின் வாயிலாக இந்தியைத் திணிக்கத் துடிப்பதா?.. ராமதாஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article