திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே பிறந்த உடன் 2 குழந்தைகளை கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இளம்பெண், வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புதுக்காடு அருகே உள்ள ஆம்பல்லூர் பகுதியை சேர்ந்தவர் பவின் (26). நேற்று முன்தினம் அதிகாலை புதுக்காடு போலீஸ் நிலையத்திற்கு ஒரு பையுடன் வந்தார். தான் கொண்டு வந்துள்ள பையில் தனது 2 குழந்தைகளின் எலும்புகள் இருப்பதாகவும், தனது காதலி தான் குழந்தைகளை கொன்று புதைத்ததாகவும் கூறினார்.
இதை கேட்டதும் போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர். பையுடன் வந்த வாலிபர் போதையில் இருந்ததால் முதலில் போலீசார் அதை நம்பவில்லை. பின்னர் அவரது பையை வாங்கி பார்த்த போது அதில் எலும்புகள் இருந்ததைப் பார்த்து திடுக்கிட்டனர். இதையடுத்து பவினிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கடந்த சில வருடங்களுக்கு முன்பு பவினுக்கு அருகில் உள்ள வெள்ளிக்குளங்கரை பகுதியைச் சேர்ந்த அனீஷா (22) என்ற இளம்பெண்ணுடன் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டது.
நாளடைவில் 2 பேருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. அதன்படி 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால் கடந்த 2021ம் ஆண்டு அனீஷா கர்ப்பிணி ஆனார். இந்த விவரம் 2 பேரின் வீட்டினருக்கும் தெரியாது. இந்தநிலையில் கடந்த 2021 நவம்பர் 6ம் தேதி அனீஷாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்தவுடன் அந்தக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று வீட்டுக்குப் பின்னால் புதைத்து விட்டார். ஆனால் ஒன்றும் நடக்காதது போல் அதன் பிறகும் 2 பேரும் வழக்கம் போல் பழகி வந்துள்ளனர்.
8 மாதங்களுக்கு பின்னர் அனீஷா குழந்தையின் உடல் புதைத்த இடத்தை தோண்டி எலும்புகளை வெளியே எடுத்து அதை ஆற்றில் வீசிவிடுமாறு கூறி பவினிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் எலும்பை ஆற்றில் வீசாமல் தனது வீட்டில் பத்திரமாக வைத்திருந்தார். இதற்கிடையே கடந்த வருடம் அனீஷா மீண்டும் கர்ப்பிணியானார். கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி 2வதாக அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையையும் கழுத்தை நெரித்துக் கொன்ற அனீஷா, உடலை பவினிடம் கொடுத்து வேறு எங்காவது புதைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்தக் குழந்தையின் உடலை தன்னுடைய வீட்டுக்கு அருகே உள்ள ஒரு இடத்தில் புதைத்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்து 4 மாதங்களுக்குப் பின்னர் பவின் குழந்தையை புதைத்த இடத்தை தோண்டி எலும்பை எடுத்து வைத்துக் கொண்டார். இந்தநிலையில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அனீஷாவுக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக பவின் சந்தேகித்தார். இதனால் தன்னுடைய காதலியை பழிவாங்குவதற்காக பவின் போலீஸ் நிலையத்திற்கு வந்து இந்த விவரங்களை கூறினார். இரண்டு இடங்களிலும் தோண்டி உடலின் சில பாகங்களை போலீசார் மீட்டனர். தொடர்ந்து பல மணிநேர விசாரணைக்குப் பிறகு போலீசார் 2 பேரையும் கைது செய்து திருச்சூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவரையும் காவலலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
* யூடியூப் பார்த்து சொந்தமாக பிரசவம் பார்த்த அனீஷா
அனீஷா லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இதனால் மருத்துவம் குறித்து இவருக்கு ஓரளவு தெரியும். கர்ப்பிணியாக இருக்கும் போதே பிரசவம் பார்ப்பது எப்படி என்பது குறித்து இவர் யூடியூபில் பார்த்து தெரிந்து கொண்டுள்ளார். இதன்படி பிரசவ வலி வந்தவுடன் சொந்தமாக பிரசவம் பார்த்துள்ளார். கர்ப்பிணியாக இருக்கும் போது இவர் சற்று குண்டாக இருந்தார். இதுகுறித்து சிலர் கேட்ட போது ஹார்மோன் கோளாறு காரணமாக குண்டானதாக கூறியுள்ளார். மேலும் வயிறு வெளியே தெரியாமல் இருப்பதற்காக லூசான ஆடைகளை அணிந்துள்ளார். வயிற்றை துணியால் இறுக்கி கட்டியும் வைத்திருந்தார்.
The post எலும்புகளுடன் வந்து காதலியை சிக்க வைத்த வாலிபர் பச்சிளம் குழந்தைகளை கொன்று புதைத்த தாய், காதலனுடன் கைது: கேரளாவில் பரபரப்பு appeared first on Dinakaran.