எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டில் எந்த அறிகுறிகளும் இல்லை வலிப்பு வந்தது போல் ஞானசேகரன் நடித்தது மருத்துவ பரிசோதனையில் அம்பலம்

3 hours ago 1

* மீண்டும் விசாரணையை தொடங்கிய சிறப்பு புலனாய்வு குழு
* நெருங்கிய தொடர்பில் இருந்த 6 காவலர்களின் செல்போன்கள் ஆய்வு

சென்னை: எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டில் உடல் நிலை பாதித்தது போல் எந்த அறிகுறிகளும் இல்லை, எனவே பாலியல் சைக்கோ ஞானசேகரன் சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணையை திசை திருப்பும் நோக்கில் தனக்கு வலிப்பு வந்தது போல் நடித்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து மீண்டும் அவனிடம் அதிகாரிகள் விசாரணை தொடங்கி நடத்தி வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 24ம் தேதி இரவு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கடந்த 25ம் தேதி கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணிக்கடைக்காரரான ஞானசேகரன் என்பவனை கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் தனிப்படையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 3 பெண்கள் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்டு சிறப்பு புலனாய்வு குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி கடந்த 20ம் தேதி மாலை முதல் 7 நாள் காவலில் பாலியல் சைக்கோ ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ஞானசேகரனிடம் அவனது செல்போன் மற்றும் லேப்டாப்பில் உள்ள ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்கள் யார் யார்? என்பது குறித்து வீடியோவை நேரடியாக ஞானசேகரிடம் காண்பித்து விசாரணை நடத்தினர்.

அப்போது நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் திடீரென ஞானசேகரன் ‘கண்களை மேல் நோக்கி பார்த்த நிலையில் கை மற்றும் கால்களை அசைத்தப்படி வலிப்பு ஏற்பட்டது’. இதனால் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே ஞானசேகரனை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கைதிகளுக்கான சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு வலிப்பு நோய் தொடர்பாக டாக்டர்கள் ஞானசேகரனுக்கு தலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்த்தனர்.

அப்போது, ஞானசேகரன் வலிப்பு ஏற்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் ஏற்படவில்லை என்று எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போட்டு மூலம் தெரியவந்தது. இதனால் குழப்பமடைந்த டாக்டர்கள் உடனே ஞானசேகரனின் ஸ்கேன் ரிப்போர்ட்டை மூத்த டாக்டர்களிடம் காண்பித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தான் ஞானசேகரன் உடல் நிலை சீராக உள்ளது என்றும், விசாரணையை திசை திருப்பும் வகையில், அவர் வேண்டும் என்றே வலிப்பு வந்தது போல் நடித்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் டாக்டர்கள் அறித்த பரிந்துரைப்படி மீண்டும் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஞானசேகரன் செல்போனில் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்த போது, அதில் அடையாறு காவல் நிலையத்தில் பணியாற்றும் 6 காவலர்கள் ஞானசேகரனுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர்களுக்கு ஞானசேகரன் சில வீடியோக்களை பகிர்ந்ததும் தொலைதொடர்பு தகவல்களின் படி உறுதியாகியுள்ளது. இதையடுத்து ஞானசேகரனிடம் தொடர்பில் இருந்த 6 காவலர்களின் செல்போன்களை ஆய்வு செய்யும் வகையில், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

* மாணவியின் எப்ஐஆர் வெளியான விவகாரம்: அபிராமபுரம் எழுத்தர் மருதுபாண்டி சேர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் க்ரைம் போலீசார் மாணவியின் முதல் தகவல் அறிக்கையை எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக இதுவரை 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையும் தற்போது நீதிமன்றம் அமைத்த 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகின்றது. இந்நிலையில் மாணவியின் முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தற்போது அபிராமபுரம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் தலைமை காவலர் மருதுபாண்டி என்பவரை சேர்த்துள்ளனர். இதனால் அவரிடமும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டில் எந்த அறிகுறிகளும் இல்லை வலிப்பு வந்தது போல் ஞானசேகரன் நடித்தது மருத்துவ பரிசோதனையில் அம்பலம் appeared first on Dinakaran.

Read Entire Article