புதுடெல்லி,: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அமைச்சர்களும் கலந்து கொண்டு அரசின் முக்கிய திட்டங்களுக்கும், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றுக்கும் அனுமதி மற்றும் ஒப்புதல் அளித்தனர். கூட்டம் தொடங்கியவுடன், இந்தியாவில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட 50வது ஆண்டையொட்டி, எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைச்சரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘எமர்ஜென்சியின்போது அத்துமீறல்களுக்கு எதிரான அவர்களின் முன்மாதிரியான துணிச்சலுக்கும், எதிர்ப்புக்கும் அமைச்சரவை அஞ்சலி செலுத்தியது. எமர்ஜென்சியையும், இந்திய அரசியலமைப்பின் உணர்வை சீர்குலைக்கும் முயற்சியையும் துணிச்சலுடன் எதிர்த்த எண்ணற்ற நபர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து கவுரவிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.
கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்களுக்கு அனுமதி மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் ரூ.115.5கோடி நிதியுதவியுடன் சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தில் தெற்காசிய பிராந்திய ஆராய்ச்சி மையத்தை அமைக்கும் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவானது, ஜார்க்கண்டில் ஜாரியா நிலக்கரி வயலில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வுக்காக திருத்தப்பட்ட ஜாரியா மாஸ்டர் திட்டத்தை அங்கீகரித்து ஒப்புதல் அளித்தது.
திருத்தப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கான மொத்தம் ரூ.5940கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ் மீள்குடியேற்றப்படும் குடும்பங்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கு திருத்தப்பட்ட திட்டம் முக்கியத்துவம் அளிக்கும். மறுவாழ்வு பெற்ற குடும்பங்களின் பொருளாதார தன்னம்பிக்கையை உறுதி செய்வதற்காக வருமானம் ஈட்டும் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும். புனே மெட்ரோவின் 2வது கட்டத்திற்கு ரூ.3,626கோடி ஒதுக்கி ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புனே மெட்ரோ ரயில் திட்டத்தில் 2ம் கட்டத்தின் கீழ் உள்ள இரண்டு வழித்தடங்களான வனாஸ் முதல் சந்தானி சவுக் மற்றும் ராம்வாடி முதல் வாகோலி வரையிலான வழித்தடங்கள் கட்டமைக்கப்படும். இந்த இரண்டு வழித்தடங்களும் 12.75கி.மீ. நீளமுள்ளவை. மேலும் 13 நிலையங்களை உள்ளடக்கியவை. இந்த திட்டம் நான்கு ஆண்டுகளுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டு தொகையை ஒன்றிய அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் இருதரப்பு பன்முக நிறுவனங்கள் சமமாக பகிர்ந்து கொள்ளும்.
* சுபான்சு சுக்லாவுக்கு வாழ்த்து
அமைச்சரவை கூட்டத்தில், ஆக்சியம் -4 விண்வெளி பயண வெற்றிக்கும், விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியர் சுபான்சு சுக்லா மற்றும் இதர விண்வெளி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
The post எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் அஞ்சலி appeared first on Dinakaran.