ஆன்ட்வெர்ப்: எப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் மகளிர் போட்டியில் இந்திய அணியை, பெல்ஜியம் மகளிர் அணி, 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. பெல்ஜியம் நாட்டின் ஆன்ட்வெர்ப் நகரில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் இடையே எப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் மகளிர் ஹாக்கி போட்டி நடந்தது. இந்த போட்டியில் 17 முறை பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. போட்டியின் முதல் கோலை இந்திய வீராங்கனை தீபிகா, 6வது நிமிடத்தில் போட்டார்.
அதன் பின் இந்திய வீராங்கனைகளால் பெல்ஜியம் வீராங்கனைகளுக்கு ஈடு கொடுத்து ஆட முடியவில்லை. அற்புதமாகவும், ஆக்ரோஷமாகவும் ஆடிய பெல்ஜியம் வீராங்கனைகள், ஹெலன் பிரேசர் 37 மற்றும் 55வது நிமிடத்திலும், லுாசி பிரெய்னி 41வது நிமிடத்திலும், ஆம்ப்ரி பாலன்கீன் 54வது நிமிடத்திலும், சார்லோட் எங்கிள்பர்ட் 58வது நிமிடத்திலும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து கோல்கள் போட்டு இந்திய அணியை திணறடித்தனர். இந்த 5 கோல்களும், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி போடப்பட்டன.
அதனால், 5-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அபார வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணி இதற்கு முன், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா அணிகளுக்கு எதிராக நடந்த தலா இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது. தற்போது 5வது முறையாக, பெல்ஜியம் அணிக்கு எதிராக மற்றொரு தோல்வியை தழுவி உள்ளது குறிப்பிடத் தக்கது.
ஆடவர் பிரிவில் நடந்த போட்டியில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் மோதின. இப்போட்டியில் பெல்ஜியம் அணி சிறப்பாக ஆடி, 6-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய ஆடவர் அணி, 7வது முறையாக தொடர் தோல்வியை சந்தித்துள்ளது ஹாக்கி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
The post எப்ஐஎச் புரோ லீக் ஹாக்கி: இந்திய மகளிர் அணியை பந்தாடிய பெல்ஜியம் appeared first on Dinakaran.