![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38280941-aswravi.webp)
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த முதல் ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினர்.
இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் 6000-க்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த வீரராக வரலாற்று சாதனை படைத்தார். மேலும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரராகவும் சாதனை படைத்தார்.
இந்நிலையில் தன்னைவிட ரவீந்திர ஜடேஜா திறமையான வீரர் என்றும் அவரை பெரிதாக யாரும் பாராட்டுவதில்லை என்றும் இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அஸ்வின் கூறுகையில், "ஜடேஜா நிச்சயம் என்னை விட ஒரு திறமையான வீரர். ஆனால் அவரை ஊடகங்கள் பாராட்டுவதில்லை. இந்திய அணி தோற்கும் போதெல்லாம் அவரை எல்லாம் எல்லோரும் வில்லனாக பார்க்கிறார்கள். ஆனால் அவர் சிறப்பாக செயல்படும்போது யாரும் அவரை பாராட்டுவதில்லை. பந்துவீச்சில் அவர் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி பீல்டிங்கிலும் தனது முழு பங்களிப்பை வழங்குகிறார். அதுதவிர்த்து அழுத்தமான வேளைகளில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். ஆனால் அவருக்கு போதுமான அங்கீகாரம் நாம் கொடுப்பதில்லை" என்று கூறினார்.