
லாகூர்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாமை அந்நாட்டு ரசிகர்களும், ஊடகங்களும் 'கிங்' என்று அடைமொழி கொண்டு அழைப்பர். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன நாளிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏராளமான சாதனைகளை படைத்தார். அதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் அதன்பின் அவரது செயல்பாடுகள் பெரும் விமர்சனங்களை சந்தித்தன. குறிப்பாக கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் சொதப்பினார். இதன் காரணமாக கடந்த ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பைகளில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு வெளியேறியது. அதன் காரணமாக தற்போது கேப்டன் பதவியிலிருந்து விலகி சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் தன்னை யாரும் 'கிங்' என்று அழைக்க வேண்டாம் என்று பாபர் அசாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "என்னை யாரும் கிங் என்று அழைக்க வேண்டாம். அப்படி கூறுவதை நிறுத்துங்கள். நான் இன்னும் 'கிங்' என்ற பட்டத்திற்கான இடத்திற்கு வரவில்லை. கடந்த காலத்தை மறந்து விட்டு தற்போது எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது எனக்கு அணியில் ஒரு புதிய ரோல் இருக்கிறது. எனவே எனது ஆட்டத்தில் மட்டும் கவனத்தில் செலுத்தி நான் பயணிக்க உள்ளேன்" என்று கூறினார்.