என்னுடைய ஸ்டைல் ‘சொல் அல்ல செயல்’ உங்கள் சகோதரன் முதல்வராக உள்ளேன் நம்பிக்கையுடன் அனைவரும் வாழுங்கள்: அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2 hours ago 3

சென்னை: ‘’என்னுடைய ஸ்டைல் சொல்ல அல்ல செயல்’’ என்றும் உங்கள் சகோதரன் முதல்வராக உள்ளேன்’ என்றும் அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட பேசினார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தினம் 2025 விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவை துவக்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தந்திருக்கும் உங்கள் எல்லோரையும் பார்க்கும்போது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பாட்டு ஒன்று நினைவிற்கு வருகிறது. ‘’எங்கும் பாரடா இப்புவி மக்களை – பாரடா உனது மானிடப் பரப்பை! பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்! என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்’’ -என்று பாவேந்தர் பாடினார். அப்படிப்பட்ட மகிழ்ச்சிதான் இப்போது என் உள்ளத்தில் நிறைந்திருக்கிறது.,

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை, இந்தாண்டு விழாவின் கருப்பொருளாக “எத்திசையும் தமிழணங்கே” என்று தமிழ்த்தாய் வாழ்த்தின் வரிகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம். நாடு, நிலம் எல்லைகள், கடல் என்று புறப்பொருட்கள் நம்மைப் பிரித்தாலும் தமிழ்மொழி தமிழினம் என்ற உணர்வில் நாமெல்லாம் உள்ளத்தால் ஒன்றாக இருக்கிறோம்! தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி! அந்த உணர்வோடு உறவோடு தாய் மண்ணாம் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் உங்கள் எல்லோரையும், உங்களில் ஒருவனாக வருக… வருக… என்று வரவேற்கிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சராக, அயலகத் தமிழர் நாள் நல்வாழ்த்துகளையும் உலகத் தமிழருக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இங்கு கூடியிருக்கும் பலரின் முன்னோர்கள் நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக தாய்மண்ணில் இருந்து சென்று இருப்பார்கள். இந்தப் பூமிப்பந்தின் வெவ்வேறு நாடுகளுக்கும் சென்று தங்களின் ஓய்வறியாத உழைப்பு, தியாகம், வியர்வை, கண்ணீர் சிந்தி அந்த நாடுகளை வளர்த்தார்கள். அப்படிப்பட்ட தமிழ்த்தியாகிகளின் வாரிசுகளான உங்களை உறவாக அரவணைத்துக்கொள்ள தமிழ்நாடு இருக்கிறது. நான் இருக்கிறேன். அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இப்போது, இந்த மேடையில், ஆறு முக்கிய துறைகளில் முத்திரை பதித்த சாதனைத் தமிழர்களுக்கு நான் விருதுகளை வழங்கியிருக்கிறேன். அதற்கு மணிமகுடமாக, அயலகத் தமிழர்களில் பன்முகத்தன்மையோடு விளங்கும் ஒரு தமிழரைத் தேர்ந்தெடுத்து, “தமிழ்மாமணி” விருதும் பட்டயமும் வழங்கியிருக்கிறோம். அயல்நாட்டுத் தமிழர்கள் மற்றும் தமிழ்ச்சங்கங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உறவுப்பாலமாக செயலாற்றும் அயலகத் தமிழ் இளைஞர் ஒருவருக்கு, “சிறந்த பண்பாட்டுத் தூதுவர்” என்ற விருதையும் இந்த ஆண்டு முதல் வழங்கியுள்ளோம். இந்த விருதுகளை எல்லாம், இந்தாண்டு பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற விருதுகள் மூலம் பண்பாட்டுத் தூதுவர்களை உருவாக்கி, உலகெங்கும் உள்ள தமிழ்ச் சொந்தங்களோடு உறவுப் பாலம் அமைப்போம். இது எல்லாவற்றையும்விட, என் மனதுக்கு நெருக்கமான ஒரு திட்டம் இருக்கிறது. அதுதான், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்களின் வழித்தோன்றல்களை, தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து, அவர்களின் வேர்கள் பரவியிருக்கும் கிராமங்களை அடையாளம் காட்டும் “வேர்களைத் தேடி” திட்டம். இந்தத் திட்டத்தில், இதுவரைக்கும் இரண்டு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு, 157 இளைஞர்கள் தாய் மண்ணுக்கு வந்திருக்கிறார்கள். அதில் 38 இளைஞர்கள் பயணத்தின் இறுதி நாளான இன்றைக்கு நம்முடைய இந்த அரங்கில் இருக்கிறார்கள். இந்தப் பயணமும் உறவும் என்றென்றும் தொடரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அயல்நாடுகளில் மட்டுமல்ல, வெளி மாநிலங்களில் தமிழர்கள் தவித்தாலும், இந்த அரசு விரைந்து செயலாற்றி, தேவையான உதவிகளை செய்து வருகிறது. இப்படி கடந்த 07-05-2021 முதல் 28-11-2024 வரை அயல்நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இரண்டாயிரத்து 414 தமிழர்களைத் தாயுள்ளத்தோடு பாதுகாப்பாக, தாய்மண்ணுக்கு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். அயல்நாடுகளில் உயிரிழந்த 864 தமிழர்களின் உடல்களை சொந்த மண்ணுக்குக் கொண்டு வந்து, தமிழ்நாடு அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை மூலம், அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து இருக்கிறோம். என்னுடைய ஸ்டைல் ‘சொல் அல்ல செயல்’. அப்படித்தான், கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு சாதனைகளை நம்முடைய திராவிட மாடல் அரசில் செய்திருக்கிறோம். நம்முடைய தமிழர்களின் வெற்றிக்காக செயலாற்றிட தொண்டாற்றிட முன்னேற்றிட உலகம் முழுவதிலும் இருந்து வந்திருக்கக் கூடிய உங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க, உங்களில் ஒருவனாக உற்ற சகோதரனாக – மூத்த தோழனாக கேட்டுக்கொள்கிறேன்.

இந்த இனிய நிகழ்ச்சியில், உங்களுக்கான புதிய திட்டத்தின் அறிவிப்பையும் வெளியிட விரும்புகிறேன். பல்வேறு நாடுகளில் இருந்து நம் தமிழ் மொழி, நாட்டுபுறக் கலைகள், தமிழ் பண்ணிசைகளை அயலகத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாக பயிற்றுவிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கிறது. உங்களின் கோரிக்கைகளை தீர்ப்பது என் கடமை. நூறு ஆசிரியர்கள் மற்றும் தமிழ்க் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, இவர்களை அயலக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குத் தேவைக்கேற்ப அனுப்ப, ஒரு திட்டம் உருவாக்கப்படும். இந்த பயிற்றுநர்கள், அந்த பகுதியிலிருக்கும் தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து, தமிழ் மொழியையும், தமிழ்க் கலைகளையும் 2 ஆண்டுகளுக்கு நேரடிப் பயிற்சி வகுப்புகள் மூலமாக நடத்துவார்கள். இதற்கு ஆகும் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.

உங்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் எல்லாம், பூமிப்பந்தில் எங்கு இருந்தாலும் உங்கள் அடையாளத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் வேர்களை மறக்காதீர்கள். மொழியை மறக்காதீர்கள். இந்த மண்ணையும் மக்களையும் மறக்காதீர்கள். உங்கள் உறவுகளை மறக்காதீர்கள். தாய்த்தமிழ் உறவுகளாக உங்களை நெஞ்சில் சுமந்துகொண்டு, நாங்கள் இங்கு இருக்கிறோம் என்பதற்கான அடையாளம்தான் இந்த விழா. நீங்கள் எங்கு இருந்தாலும் தமிழ்நாட்டில் உங்கள் சகோதரன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறேன் என்ற நம்பிக்கையோடு வாழுங்கள். அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வாழ்த்துகளை தெரிவித்து, வாழ்வதும், வளர்வதும் – தமிழாகவும் தமிழினமாகவும் இருக்கட்டும். இவ்வாறு பேசினார்.

The post என்னுடைய ஸ்டைல் ‘சொல் அல்ல செயல்’ உங்கள் சகோதரன் முதல்வராக உள்ளேன் நம்பிக்கையுடன் அனைவரும் வாழுங்கள்: அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article