
சென்னை,
அண்மையில் முடிவடைந்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு வீரர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர்.
இந்த தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். லீக் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள், அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை கைப்பற்றி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் வருண் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் மித வேகத்தில் வீசுவதால் தமது பந்துவீச்சு பொறுமையான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பொருத்தமாக இருக்காது என்று வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் ஆர்வம் எனக்கும் இருக்கிறது. ஆனால் எனது பந்துவீச்சு அதற்கு பொருத்தமாக இருக்காது. எனது பவுலிங் கிட்டத்தட்ட மிதவேகம் போல இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் தொடர்ச்சியாக 20 - 30 ஓவர்கள் வீச வேண்டும். அதை இந்த பவுலிங்கை வைத்து என்னால் வீச முடியாது. நான் வேகமாக வீசுவதால் 10 - 15 ஓவர்களை மட்டுமே பவுலிங் செய்ய முடியும். அது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பொருத்தமாக இருக்காது.
எனவே தற்போதைய நிலையில் நான் 20 மற்றும் 50 ஓவர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். வேகப்பந்து வீச்சாளராக கெரியரை தொடங்கினாலும் அதைத் தொடர முடியாததற்காக நான் வருத்தப்படவில்லை. இங்கே நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பந்து ஸ்விங் ஆகாது. அங்கே சுழலுக்கு சாதகமான மைதானங்களே இருக்கும்.
அதனாலேயே தமிழ்நாட்டில் அதிக வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. தமிழ்நாட்டில் அது போன்ற பவுலர்கள் வருவது அரிது. பாலாஜி, நடராஜன் மட்டுமே உள்ளனர். வெளிமாநிலங்களில் நிறைய பேர் உள்ளனர். அஸ்வின் வேகப்பந்து வீச்சை விட்டு விட்டு ஸ்பின்னராக வந்தார். நானும் அந்த வழியில் இருப்பது மகிழ்ச்சி" என்று கூறினார்.