என்ன செய்வார் ஆளுநர்?

1 week ago 6

இனி என்ன செய்யப்போகிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி?. இந்த கேள்வி தான் இன்று நாடு முழுவதும் எழுந்துள்ளது. ஏனெனில், தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம், ஆளுநர் நேர்மையுடன் செயல்படவில்லை, ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரம் என்பது அனுமதிக்கப்பட முடியாதது என்றெல்லாம் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

நாடு முழுவதும் பா.ஜ அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மறைமுக ஆட்சி நடத்தி வருகிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. மேற்குவங்கம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மிகவும் பாரம்பரியம் மிக்க தமிழ்நாட்டிலும், ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் சித்துவிளையாட்டை ஒன்றிய மோடி அரசு நடத்தி வந்தது. தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவர் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தார் என்றே சொல்ல வேண்டும். மாண்புமிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பி வைத்த அத்தனை மசோதாக்களுக்கும் உடனே ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்தார், இழுத்தடித்தார். இன்னும் சொல்லப்போனால் இஷ்டம் போல் அனுமதி கொடுத்துவந்தார்.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுத்துப்பார்த்தார், அமைதி காத்தார், ஏன் அறிவுறுத்திப்பார்த்தார். எதுவுமே மாறவில்லை. மாறாக தான் செய்த அனைத்தும் நியாயம், ஆளுநர் பதவிக்கு என்று தனி அதிகாரம் உள்ளது, மசோதாக்களை நிறுத்தி வைக்க முடியும் என்றெல்லாம் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டார். வேறுவழியில்லாமல் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட கேட்டு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார் தமிழ்நாடு முதல்வர்.

அந்த வழக்கில் தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களையும் நிலுவையில் வைத்திருப்பது சட்டப்பிரிவு 200-க்கு எதிரானது மற்றும் பிழையானது. நீண்ட காலமாக மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. பஞ்சாப் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது சரியல்ல. ஆகவே, உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களும் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என்று அறிவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது, அதிருப்தியை தெரிவிப்பது என நான்கு அதிகாரங்கள் ஆளுநருக்கு உள்ளதாக ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தன்னிச்சையான அதிகாரம் என்ற கருத்துக்கு அரசியலமைப்பில் இடமில்லை.

மசோதா மீது ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். மசோதாக்களை நிறுத்தி வைத்தால் அதிகபட்சம் மூன்று மாத காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். ஆளுநர் ஒரு மாநில அரசின் நலன் மற்றும் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும். அவருக்கு என தனிப்பட்ட விருப்புரிமை எதுவும் இருக்க முடியாது என்றெல்லாம் கூறி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். தமிழ்நாட்டின் மாண்பையும், வரலாற்று சிறப்பு மிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையின் மகத்துவத்தையும் யாரும், எதுவும் செய்துவிட முடியாது என்பதை இந்த தீர்ப்பை பெற்றுத்தந்ததன் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார் நமது முதல்வர். தமிழ்நாடு பெருமைப்பட வேண்டிய தருணம் இது.

The post என்ன செய்வார் ஆளுநர்? appeared first on Dinakaran.

Read Entire Article