என்ஆர்ஐ மோசடி

2 months ago 10

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான நீட்டில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக ஒருபக்கம் புகார்கள் குவிந்தது. மற்றொரு புறம், இந்தியா முழுவதும் என்ஆர்ஐ ஒதுக்கீடு மூலம் மாணவர்கள் சேர்க்கை மோசடியாக நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாக நாடு முழுவதிலும் இருந்து புகார்கள் குவிந்தன.

வழக்கத்துக்கு மாறாக பல மாணவர்கள் நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். அதிலும் பிளஸ் டூ தேர்வில் இயற்பியல் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் நீட் தேர்வில் 700-க்கும் மேல் மதிப்பெண்ணை எடுத்திருந்தான். ஒன்றிய அரசு நடத்திய விசாரணையில், நீட் தேர்வில் பல மோசடிகள் நடந்திருப்பது அம்பலமானது. நீட் வினாத்தாள்கள் பல லட்சங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதும், பணம் கொடுத்து நீட் தேர்வில் பலர் முழு மதிப்பெண்களை பெற்றிருப்பதும், நீட் வினாத்தாளை கசிய விடப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது. மோசடிகளில் ஈடுபட்ட 63 மாணவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் 40 மாணவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 17 மாணவர்கள் பீகாரை சேரந்தவர்கள். அடுத்ததாக என்ஆர்ஐ ஒதுக்கீடு மூலம் மாணவர்கள் சேர்க்கையில் பெரும் மோசடி நடந்து உள்ளது. என்ஆர்ஐ ஒதுக்கீடு என்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள் , இந்திய வம்சாவளியினர் (PIOக்கள்), மற்றும் இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (OCIs) போன்ற பல்வேறு துறைகளில், குறிப்பாக கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு இட ஒதுக்கீடு ஆகும்.

இந்தியாவில் உள்ள பல பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் என்ஆர்ஐ ஒதுக்கீட்டின் கீழ் குறிப்பிட்ட சதவீத இடங்களை ஒதுக்கி, குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் என்ஆர்ஐக்கள் நேரடி சேர்க்கையைப் பெற உதவுகின்றன. இதில் விண்ணப்பதாரர் அல்லது அவர்களது பெற்றோர் வேலைவாய்ப்பு சான்றிதழ், விசா அல்லது பாஸ்போர்ட் போன்ற சரியான ஆவணங்கள் மூலம் தங்கள் என்ஆர்ஐ நிலையை நிரூபிக்க வேண்டும்.

என்ஆர்ஐ ஒதுக்கீடு என்பது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இதை பயன்படுத்தி சில தரகர்கள், மோசடியாக என்ஆர்ஐ ஒதுக்கீடு மூலம் மாணவர்களை சேர்த்து பல லட்சங்களை கறந்து விடுகின்றனர். இதற்கு ஒன்றிய அரசில் உள்ள அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. புதுச்சேரி அரசின் சென்டாக் மூலம் நேற்று வரை 75 மாணவர்கள் போலி என்ஆர்ஐ ஆவணங்களைச் சமர்ப்பித்து சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதுபோன்று தமிழ்நாட்டிலும் எம்பிபிஎஸ் சேருவதற்கு போலியாக என்ஆர்ஐ சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 மாணவர்கள் மீதும், முதுகலை மருத்துவ படிப்பில் 44 பேர் மீதும் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் அருணலதா அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.
இந்தியா முழுவதும் போலி என்ஆர்ஐ ஒதுக்கீடு மூலம் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடந்து உள்ளது. என்ஆர்ஐ ஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய அரசு ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுப்பது மூலம் உண்மையான என்ஆர்ஐ மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது எல்லையற்ற மகிழ்ச்சியாகும்.

The post என்ஆர்ஐ மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article