
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் நடித்துள்ள முக்கியமான 36 கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் டோவினோ தாமஸ் 'ஜதின் ராமதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் 'சையத் மசூத்' என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பான் இந்திய அளவில் மார்ச் 27-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் 'எம்புரான்' படம் குறித்து பேசிய மோகன்லால், "முதல் பாகமான லூசிபர் படத்தின் இறுதியில் ஸ்டீபன் நெடுப்பள்ளியான நான் குரேஷி ஆபிரஹாமாக அறிமுகமானேன். தற்போது உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தில் ஆபிரஹாம் யார்? என்பது பற்றி விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. எம்புரான் திரைப்படம் தான் என் திரைவாழ்வில் மிகப்பெரிய படம் என நினைக்கிறேன்.எம்புரானின் தொடர்ச்சியாக 3-ம் பாகம் உருவாக உள்ளது. உங்களைப்போல நானும் மார்ச் 27 -ம் தேதிக்குக் காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
