எனது பதவி காலத்தில் 8,061 வழக்குகளுக்கு தீர்வு: நீதிபதி டி.ஷியாம்பட் பெருமிதம்

3 hours ago 2

பெங்களூரு: கர்நாடக மனித உரிமைகள் ஆணையத்தில் கொடுக்கப்படும் புகார்களை சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டு வருகிறது. எனது பதவி காலத்தில் 8061 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி டி.ஷியாம்பட் தெரிவித்தார். கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி டி.ஷியாம்பட், ஆணைய தலைவராக பொறுப்பேற்றபின், ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த மாவட்டங்கள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதன் மூலம் தூரத்தில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த புகார்தாரர்கள் பெங்களூரு வந்து செல்ல வேண்டிய சிரமம் தவிர்க்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று பெல்லாரி மாவட்டத்தில் நீதிபதி டி.ஷியாம்பட் சுற்றுப்பயணம் செய்தார். அவருடன் ஆணைய உறுப்பினர் எஸ்.கே.வென்டிகோடி, ஆணைய செயலாளர் அருண் பூஜார் உடனிருந்தனர். பெல்லாரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘பல வழிகளில் பாதிக்கப்படும் மக்கள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுக்கிறார்கள்.

ஆணையத்தில் புகார் கொடுத்தால், தங்கள் மீதான உரிமை மீறலுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அதை காப்பாற்றும் முயற்சியை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மாநில மனித உரிமைகள் ஆணையம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள 31 மாவட்டங்களை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டு ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு தூரத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து பெங்களூரு வந்து செல்வது பெரும் சுமையாக இருக்கும் என்பதால், ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஆணையத்தின் விசாரணை கூட்டம் நடத்துகிறோம்.

இதில் அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த புகார்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்படுகிறது. பெல்லாரி மாவட்டத்தில் இன்று (நேற்று) சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளோம். இம்மாவட்டம் தொடர்பாக 27 புகார்கள் ஆணையத்திற்கு வந்திருந்தது. 20 வழக்குகள் மீது விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. இன்னும் 7 புகார்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. நான் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்ற பின் 16 மாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளேன். நான் பதிவியேற்ற பின் 11,200 புகார்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் 8,061 புகார்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டுள்ளது’ என்றார்.

The post எனது பதவி காலத்தில் 8,061 வழக்குகளுக்கு தீர்வு: நீதிபதி டி.ஷியாம்பட் பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article